சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சத்திய சோதனை

நீட் தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
நீட் தேர்வு

உதித்சூர்யா என்ற மாணவர் இன்னொருவரை நீட் தேர்வு எழுதவைத்து, அந்த முடிவின் அடிப்படையில் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறார்.

ரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதப்போன மாணவர்களை எல்லைதாண்டிய பயங்கரவாதிகளை சோதனை செய்வதைப்போல் கம்மலைக் கழற்றச் சொன்னார்கள், மூக்குத்தியைக் கழற்றச் சொன்னார்கள், கைக்கடிகாரத்தைக் கழற்றச் சொன்னார்கள்; கேரளாவில் ஒரு மாணவியின் உள்ளாடையையே அகற்றச்சொல்லி நாடு முழுவதும் சர்ச்சையானது. இவ்வளவு கெடுபிடிகளுடன் நடந்த நீட் தேர்வு நியாயமாகத்தான் நடந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், வேறொருவர் நீட் தேர்வை எழுத, இன்னொருவர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறார் என்பது தெரியவரும்போதுதான் இந்தக் கெடுபிடி சோதனைகளின் லட்சணம் நமக்குத் தெரியவருகிறது.

உதித்சூர்யா என்ற மாணவர் இன்னொருவரை நீட் தேர்வு எழுதவைத்து, அந்த முடிவின் அடிப்படையில் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறார். இப்போது, `மோசடி செய்திருப்பது இவர்மட்டும்தானா, இல்லை, இன்னும் நிறைய பேர் இருக்கிறார்களா?' என்று சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். வெட்கக்கேடு! ஆண்டுதோறும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 18 லட்சம் பேர் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகளை எழுதிவருகிறார்கள். ஆனால், ஒரு லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வை நடத்துவதற்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி எப்படித் திணறியதோ அதேபோலத்தான் இப்போது நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியும் திணறிவருகிறது.

நீட் தேர்வு தொடங்கிய பிறகு வினாத்தாள்கள் வெளியானது, தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சம்பந்தமில்லாமல் பக்கத்து மாநிலங்களுக்குத் தேர்வுமையங்கள் ஒதுக்கி அலைக்கழித்தது, வினாத்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடி என ஏகப்பட்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. நான்கு ஆண்டுகள் ஆகியும் இந்தக் குளறுபடிகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதோடு, ஒவ்வோர் ஆண்டும் புதிது புதிதாகக் குளறுபடிகள் உருவாவது மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

‘நீட் தேர்வே வேண்டாம்... தமிழகத்துக்கு அதிலிருந்து விலக்கு வேண்டும்’ என்கிற குரல்கள் ஏற்கெனவே இங்கே உரத்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், நீட் தேர்வில் நடந்திருக்கும் ஆள்மாறாட்ட மோசடி, மேலும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழச் செய்திருக்கிறது. நீட் தேர்வை நடத்தும் என்.டி.ஏ (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி) அமைப்பு, இதற்கெல்லாம் தரப்போகும் சமரசமற்ற தீர்வுகள்தான், இந்திய மருத்துவக் கல்வி மற்றும் மக்களுக்கான மருத்துவ சேவை ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!