Published:Updated:

கொரோனாவை வீழ்த்த உறுதியேற்போம்!

கொரோனாவை வீழ்த்த உறுதியேற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனாவை வீழ்த்த உறுதியேற்போம்!

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முடிந்தளவு, தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

கொரோனா… உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் வில்லன் வைரஸ்!

‘உலகளாவிய தொற்றுநோய்’, ‘தேசத்தின் பேரிடர்’ என அறிவிப்புகள் அச்சம் விதைக்கின்றன. எனினும், விழிப்புணர்வுடன் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பெரும் ஆறுதல். வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் துரிதம் காட்டுவதே இப்போது அவசியம். கொரோனா எச்சரிக்கை வெளியானது முதல் அண்டை மாநிலங்கள் அவசர அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, தமிழக அரசு சோம்பலாகவே செயல்படத் தொடங்கியது. போதுமான பரிசோதனை மையங்கள் இல்லாதது முதல் பாதிக்கப்பட்டோர் குறித்த வெளிப்படையான விவரங்கள் தெரிவிக்காதது வரை பலப்பல குற்றச்சாட்டுகள். தொடர் சுட்டிக்காட்டலுக்குப் பிறகே, மருத்துவ முன்னேற்பாடுகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, பொது இடங்களில் கூடுவதற்குத் தடை என நிலைமையின் விபரீதம் உணர்ந்து அவசரகால நடவடிக்கைகளைமுடுக்கி விட்டிருக்கிறது தமிழக அரசு. இதே தீவிரத்தை கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதுவரையிலும் கடைபிடிக்க வேண்டியது அரசின் கடமை.

கொரோனா வைரஸ் தொற்றினால், அதன் அறிகுறிகள் வெளிப்பட இரண்டு வாரங்களேனும் ஆகலாம் என்ற நிலையில், அடுத்த ஒரு மாதம் தமிழகம் பேரிடர் கால எச்சரிக்கையுடன்இருக்க வேண்டும். திரையரங்கம், வணிக வளாகம் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டிருப்பதும் மருத்துவ வசதிகளை அதிகரிப்பதுமாக அரசாங்கம் முதலடி எடுத்துவைத்திருக்கிறது. ஆனால், கொரோனோ பரவலைத் தடுப்பது அரசு இயந்திரத்தால் மட்டுமே சாத்தியமானதல்ல. வல்லரசுகளையும் மருத்துவ முன்னேற்றம் கண்ட நாடுகளையுமே கைப்பற்றிய கொரோனா, தற்போதைய நிலையில் எந்த கட்டுப்பாடுகளுக்கும் அடங்காத அபாயம். நம் ஒவ்வொருவரின் முனைப்பும் முன்னெச்சரிக்கையுமே அந்த அபாயத்தைக் கட்டுக்குள்வைக்கும்.

தனிநபர் சுகாதாரம், நெரிசலான பொதுஇடங்களைத் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பது என சமூகத்திலிருந்து தனிமைப்பட்டிருக்க வேண்டியது (Social Distancing) இப்போது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முடிந்தளவு, தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வுகளை தள்ளிப் போடுவதோ, ஏற்பாடு செய்யாமல் இருப்பதோ அவசியம். கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆனந்த விகடன் சார்பாக மதுரையில்ஏற்பாடு செய்திருந்த ஒரு வாசகர் கலந்தாய்வு முகாமை, வாசகர்களின் பாதுகாப்பு கருதி ரத்து செய்தோம். விகடன் குழும ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான ஏற்பாடுகளைமுடுக்கிவிட்டிருக்கிறோம்.

இப்படி ஒவ்வொரு தனிநபரும், நிறுவனமும், அரசாங்கமும் இணைந்த கூட்டுமுயற்சியே, கொரோனாவின் ‘சங்கிலித் தொடர் பரவலை’ முறியடிக்கும். நாம் அடுத்த சில வாரங்கள் ‘போதுமான இடைவெளி’யுடன் நடமாடுவதும், ‘பாதுகாப்பாக’ உரையாடுவதும் கொரோனா சங்கிலியின் கண்ணிகளை தகர்த்தெறியும்.

‘தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் கொரோனா பரவுவதை ஒவ்வொரு நாளும் தள்ளிப் போடுவேன். பிறருக்கும் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்!’ என்பதே இப்போது நம் அனைவரின் உறுதிமொழியாக இருக்க வேண்டும்.

உறுதியேற்போம்..!