
‘வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது’ என்ற குற்றச்சாட்டின்பேரில் தேர்தல் ஆணையம் ரத்து செய்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்வதற்கு முன்பு எந்த வேட்பாளர்கள் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டார்களோ, அதே வேட்பாளர்கள்தான் மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் இந்தத் தேர்தல் ரத்துக்கும் மறுதேர்தலுக்கும் என்னதான் அர்த்தம்?
பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் வேட்பாளருக்கு என்னதான் தண்டனை, சில மாதங்கள் கழித்து அதே தொகுதியில் வேட்பாளராக நிற்பதா? ‘பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரைத் தேர்தலில் போட்டியிட முடியாத வண்ணம் தகுதி நீக்கம் செய்யுங்கள்’ என்று தொடரப்பட்ட வழக்கில், ‘தேர்தலில் வெற்றி பெற்றவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களை எப்படித் தகுதி நீக்கம் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் வேலையில் தலையிட முடியாது!’’ என்று நீதிமன்றமும் ஒதுங்கிக்கொண்டது.
வேலூரில் மட்டுமல்ல... இதற்கு முன்பு நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்ததையொட்டித் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் எல்லாத் தேர்தல்களிலும் குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்களே மீண்டும் களமிறங்கினார்கள். குறிப்பாக ஆர்.கே.நகர் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மறுதேர்தலில் 20 ரூபாய் டோக்கன் பிரபலமாகி, குற்றம் சாட்டப்பட்டவரே வென்றார். இந்த அவலம் தொடர்கதையாகவே இருக்கிறது.
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள், அந்த வேட்பாளர்களையே மீண்டும் மீண்டும் நிறுத்தும் கட்சிகள் ஆகியவற்றைத் தண்டிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்காவிட்டால், தேர்தல் ரத்து என்பதும் மறுதேர்தல் என்பதும் கேலிக்கூத்தாகவே இருக்கும். இந்தக் கேலிக்கூத்துக்காக இரண்டுமுறை செலவழிக்கப்படும் பணம், மக்கள்பணம் என்பதும் வேதனைக்குரிய விஷயம்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற திட்டங்கள் விவாதிக்கப்படுவதற்கு முன்பு இத்தகைய குறைகள் களையப்பட்டு, தேர்தல் முறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.