சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தேசம் தலைவணங்குகிறது!

தேசம் தலைவணங்குகிறது!
பிரீமியம் ஸ்டோரி
News
தேசம் தலைவணங்குகிறது!

27 ஆண்டுக்காலப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, இந்திய வரலாற்றின் மிகப்பெரும் கரும்புள்ளி. அதுவரை சகோதரர்களாகப் பழகிவந்த இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்க்கவேண்டிய சூழல் உருவானது. பயங்கரவாத இயக்கங்கள், குண்டுவெடிப்புகள், மதக்கலவரங்கள், உயிர்ப்பலிகள்... நாடே நிதம் நிதம் நடுங்கிக்கொண்டேதான் இருந்தது.

ராமர் கோயிலா, பாபர் மசூதியா என்று எதிரும் புதிருமான வாதங்கள் வெளியில் நடந்துகொண்டிருப்பதைத் தாண்டி, நீதிமன்றத்தில் சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படுவதுதான் சரி என்ற நிலை உருவானது. பல ஆண்டுகள் நடந்த அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று தரப்பினர் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று 2010-ல் தீர்ப்பு வழங்கியது. மூன்று தரப்புமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. சமரசத் தீர்வு காண குழு அமைக்கப்பட்டது. அதிலும் முடிவு எட்டப்படவில்லை. இறுதிக் கட்டமாகத்தான் நவம்பர் 9 அன்று முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

`அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் இந்துக்களுக்கே சொந்தம்’ என்று அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘கோயில் கட்டுவதற்கான குழுவை மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்’ என்று சொல்லியிருப்பதோடு, ‘மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃப் வாரியத்துக்கு, அயோத்தியில் வழங்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளது.

தீர்ப்பு குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளபோதிலும் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், அ.தி.மு.க., தி.மு.க என இந்தியாவின் பல முக்கியமான கட்சிகள் வரவேற்றுள்ளன. சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜிலானி முதலில் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தாலும், ‘தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மேல்முறையீடு செய்யப்போவதில்லை’ என்று வக்ஃப் வாரியத்தின் தலைவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆக, இதுவே இறுதித்தீர்ப்பு.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சமும் இருக்கிறது. ‘1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம்’ என்றும் இந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன், 68 பேர் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்கள்மீது எடுக்கப்படவில்லை. ‘தற்போதைய தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்’ என்று சொல்லும் மத்திய அரசு, இதே தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதுபோல, பாபர் மசூதியை இடித்தவர்கள்மீதும் நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும்.

தீர்ப்பு வெளியாகும் முன்பே, ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் சமூக அமைதியையும் சட்ட ஒழுங்கையும் நல்லிணக்கத்தையும் காப்பாற்ற வேண்டும்’ என்று தொடர்ச்சியாக இருதரப்பிலும் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. இதை ஏற்று அமைதியாக இந்தத் தீர்ப்பை ஏற்ற அனைத்துத் தரப்புக்கும் இந்தத் தேசம் தலைவணங்குகிறது. ‘சட்டத்தின் தீர்ப்பே இறுதி முடிவு’ என்னும் மனப்பாங்கு பாராட்டத்தக்கது. இந்த ஒற்றுமையும் நல்லிணக்கமும் இந்தியாவை முன்னேற்றப்பாதையில் உந்தித் தள்ளட்டும்!