
ஜி.டி.பி குறியீடு 5-க்கும் கீழே குறைவது, இந்தியாவின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லை என்பதையே காட்டுகிறது.
ஜி.டி.பி என்று சொல்லப்படும் நாட்டின் ‘மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீடு’ ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 4.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இந்தத் தகவலை மத்திய அரசின் புள்ளியியல்துறை வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில்தான் ‘நாட்டில் பொருளாதாரத் தேக்கநிலை நிலவுகிறதே தவிர, பொருளாதார மந்தநிலை நிலவவில்லை’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், பொருளாதாரம் குறித்த புள்ளிவிவரங்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இல்லை என்பதே உண்மை.
மக்களுக்கு அவநம்பிக்கையளித்துவிடக் கூடாது என்று நிதியமைச்சர் விரும்புவதோ, பிரதமர் மோடி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு காண்பதோ குற்றமில்லை. ஆனால் யதார்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதும் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதும் முக்கியம். நிகழ்காலப் பிரச்னைகளைச் சரிசெய்யாமல் எதிர்காலம் குறித்துக் கனவு காண்பது பயனளிக்காது.
ஜி.டி.பி குறியீடு 5-க்கும் கீழே குறைவது, இந்தியாவின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லை என்பதையே காட்டுகிறது. ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட சரிவு இன்னும் சரியாகவில்லை. வேலையிழப்புகள் அதிகரித்திருக்கின்றனவே தவிர, குறையவில்லை. இதைச் சரிசெய்வதற்காக வங்கிகள் இணைப்பு, பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பு போன்ற பல வழிமுறைகளை மத்திய அரசு கையாண்டாலும் அவையெல்லாம் முழுவெற்றி பெற்றுவிட்டன என்று சொல்ல முடியாத சூழல்தான் நிலவுகிறது.
இந்தியா அடிப்படையில் விவசாய நாடு. இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் விவசாயத்துக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயிகள் இழப்பையே சந்தித்துவருகின்றனர். கடந்த காங்கிரஸ் அரசாங்கமானாலும் சரி, இப்போதைய பா.ஜ.க அரசாங்கமானாலும் சரி, விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்வைக்கவில்லை. ‘வளர்ச்சி’ என்ற ஒற்றைவார்த்தையில் தொழில் வளர்ச்சியில் மட்டும்தான் இரு அரசுகளும் கவனம் செலுத்தியுள்ளன. ஆனால் பொருளாதாரம் வளர்ச்சி பெறவில்லை, சரிவையே சந்தித்துள்ளது. இன்னொருபுறம் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, ஏற்கெனவே பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கியுள்ள மக்களை இன்னும் கவலைகொள்ளச் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் சித்துவிளையாட்டுகள், ‘கோட்சே தேசபக்தரா, இல்லையா’ என்னும் சர்ச்சை ஆகியவற்றையெல்லாம்விட முக்கியமானது பொருளாதாரப் பிரச்னை. மக்களும் அரசும் கவனம் செலுத்த வேண்டியது இதில்தான். ‘பிரச்னையே இல்லை’ என்று மத்திய அரசு சாதிப்பதைவிட, பிரச்னை இருப்பதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதும், அதைச் சரிசெய்வதில் கவனம் செலுத்துவதும்தான் இப்போதைய தேவை.