
முன்னெப்போதும் இல்லாத அளவு இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
ஜி.டி.பி (உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம்) 4.5 சதவிகிதம் என்கிற அளவுக்கும்கீழ் சென்றிருக்கிறது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஜி.எஸ்.டி வரிவசூலில் மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை என்று மாநிலங்களின் நிதியமைச்சர்கள் சமீபத்தில் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து முறையிட்டனர். இந்தப் பிரச்னை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவதைக்கிறது. பணப்புழக்கம் குறைந்திருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்திருக்கிறது. செலவுசெய்து பொருள்களை வாங்க மக்கள் தயங்குவதால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’ நாட்டையே பதறவைத்திருக்கிறது!
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்காளிகள் குடியேறியதால் ஏற்பட்ட பிரச்னைகள், நூறாண்டுக்கால வரலாறு கொண்டது. ‘அரசு நிர்வாகத்திலும் வேலைவாய்ப்பிலும் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரிக்கிறது’ என்ற அந்த மக்களின் ஆதங்கத்தை, உல்ஃபா போன்ற ஆயுதப்போராட்ட இயக்கங்கள் பயன்படுத்திக்கொண்டன. இதையொட்டி அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ராஜீவ் காந்தி ‘தேசியக் குடியுரிமைப் பதிவேடு’ திட்டத்தை முன்மொழிந்தார். அதற்குப்பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் மேற்கொள்ளப்பட்ட ‘தேசியக் குடியுரிமைப் பதிவேட்டு’த் திட்டத்தில் 19 லட்சம் பேருக்கு மேல் குடியுரிமையை இழக்கவேண்டிய சூழல். இதில் 11 லட்சம் பேருக்கும் மேல் முஸ்லிம் அல்லாதவர்கள். இந்தச் சூழலில்தான் ‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்’ என்ற ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை’ மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்தச் சட்டம் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கத் தயாராயில்லை. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் அடிப்படை வசதிகள் இல்லாத சிறைக்கொட்டடி போன்ற முகாம்கள், கடும் கெடுபிடிகள் ஆகியவற்றால் அவதியுறுகிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டியதுதான் நியாயம். ஆனால் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமையை மறுக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க.வும் பாட்டாளி மக்கள் கட்சியும் வாக்களித்திருந்தால் இந்தச் சட்டம் நிறைவேறுவது தடைப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளையும் ஈழத்தமிழர்களின் நலன்களையும் புறக்கணித்துவிட்டு, அ.தி.மு.க-வும், பாட்டாளி மக்கள் கட்சியும் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலமாக தமிழினத்துக்குத் துரோகத்தை இழைத்துவிட்டன. ‘கூட்டணி தர்மம்’, ‘நிர்பந்தம்’ என்று ஆயிரம் சப்பைக்கட்டுகள் கட்டினாலும் இந்த துரோகம் மன்னிக்க முடியாதது.
மத்திய அரசின் ‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு’ எதிராக அஸ்ஸாம், மேற்குவங்கம், டெல்லி எனப் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஏற்கெனவே ‘அந்நிய இனத்தவரால் மண்ணின் மைந்தரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன’ என்ற குரல்கள் இப்போது வலுவடைந்துள்ளன. இந்தக் ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’ பிராந்திய எண்ணங்களை வலுப்படுத்தி, தேச ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இன்னொருபுறம், ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை’ என்னும் இந்தச் சட்டம், மதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடுகிறது. ‘மதம் உள்ளிட்ட பிறப்பு அடையாளங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது’ என்று வலியுறுத்தும் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15 மற்றும் 21வது பிரிவுகள் ஆகியவற்றுக்கு எதிரானது இந்தச் சட்டம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர் ரொமிலா தாப்பர், பிரபாத் பட் நாயக், ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட 600 அறிஞர்கள்.
பிராந்திய எண்ணத்தையும் பிரிவினைவாதத்தையும் வலுப்படுத்துவதோடு, மதத்தின் பெயரால் மக்களிடையே பிளவையும் ஏற்படுத்தும் இந்தச் சட்டம், கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை முன்வைத்துதான் மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று இரண்டாவது முறையும் பிரதமர் ஆகியிருக்கிறார் நரேந்திர மோடி. ஆனால் மத்திய அரசு பொருளாதாரப் பின்னடைவுகளைச் சரிசெய்யாமல், அரசியல் நோக்கத்துடன் சர்ச்சைகளைக் கிளப்பும் சட்டங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுவந்தால், மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.