சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கண்துடைப்பு மசோதாவா?

கண்துடைப்பு மசோதாவா?
பிரீமியம் ஸ்டோரி
News
கண்துடைப்பு மசோதாவா?

சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறிவிட்டாலும், மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் இம்முயற்சி முழுமையடையும்.

`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோது, அதை வரவேற்றதுடன் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தோம். தற்போது இதற்கான மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. ஆனாலும், அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காததுடன், புதிய குழப்பங்களும் கேள்விகளும் முளைத்திருப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது.

முதலில், ‘டெல்டா விவசாயிகளின் நலன் மற்றும் தமிழக உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்று முதல்வர் கூறியிருந்தார். ஆனால், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்ட டெல்டா பகுதிகள் இந்தச் சட்டத்தில் இப்போது சேர்க்கப்படவில்லை.

விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் உள்ளிட்ட திட்டங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. இங்கே, செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் கிணறுகளின் எண்ணிக்கை 700. தோண்டுவதற்குத் தயாராக இருக்கும் கிணறுகள் 489. இவற்றையெல்லாம் அனுமதித்துக்கொண்டே ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்பது ஏமாற்றுவேலையே என்று விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘வேளாண் மண்டலத்தில் இருக்கும் துறைமுகம், தொலைத்தொடர்பு, மின்சாரம், நீர்விநியோகம் போன்ற உள்கட்டமைப்புகளை பாதித்தலாகாது. இதை மீறுகிறவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் அபராதமும் விதிக்கப்படும்’ என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ‘விதிகளை மீறுபவர்கள்’ என்பது, வேளாண் பாதுகாப்பு மண்டலத்தை பாதிக்கும்வகையிலான புதிய திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் குறிக்குமா, அல்லது, ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களைக் குறிக்குமா? தொழிற்சாலைகளைத்தான் என்றால், அவை அரசின் அனுமதி பெறாமல், அரசின் கவனத்தில் வராமல் இயங்க வாய்ப்பில்லையே?

சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறிவிட்டாலும், மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் இம்முயற்சி முழுமையடையும். ஏற்கெனவே நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், ‘வேளாண் பாதுகாப்பு மண்டல’த்துக்கு அதே மத்திய அரசு அனுமதி தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய சூழலில் கலங்கி நிற்கும் விவசாயிகளை சற்றே ஆறுதல்படுத்தியுள்ளது, ‘கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் 45 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படும்’ என ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என்கிற அறிவிப்பு. இதே, அ.தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணைதான் அதுவும். ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பு கண்துடைப்பே’ என்று பரவலாகப் பேச்சு எழுந்துள்ள நிலையில், இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டு, விவசாயிகளை அமைதிப்படுத்தப் பார்க்கிறது அரசு.

குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் நிரந்தத் தெளிவும் தீர்வும் கொடுக்காதவரை, ஒருபோதும் விவசாயிகளை அமைதிப்படுத்த முடியாது என்பதே உண்மை.