
பிரதமர் நரேந்திர மோடியோ, “தேசியக் குடியுரிமைப் பதிவேடு அஸ்ஸாமில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த அதிருப்திகள், எதிர்ப்புகள், போராட்டங்கள் தணியாத சூழலில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்த பணிகளைத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தை சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. பா.ஜ.க ஆளாத மாநிலங்களின் பிரதிநிதிகள், மக்கள்தொகைப் பதிவேட்டில் `தாய் மற்றும் தந்தை பிறந்த இடம்' என்றிருப்பதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது வழக்கமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்றால் இத்தகைய சந்தேகங்கள் எழுந்திருக்காது. ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடியுரிமைப் பதிவேடு ஆகியவை குறித்து எழுந்த பல சந்தேகங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாததால், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்தும் சந்தேகங்களும் அதிருப்திகளும் எழுந்துள்ளன. கேரளா, மேற்குவங்கம் மட்டுமல்லாமல், பா.ஜ.க கூட்டணியில் உள்ள பீகார் அரசும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என அறிவித்துவிட்டது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, `குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துப் பொதுமக்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்' என்று அறிவித்திருந்தது மத்திய உள்துறை அமைச்சகம். ஒருபுறம் இப்படி அறிவித்துக்கொண்டே ஜனவரி 10 முதல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக அதே உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவித்துள்ளது.
சமீபத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பஞ்சாப் மாநில சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. `கண்டிப்பாக எல்லா மாநில அரசுகளும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று மத்திய அரசு அறிவிப்பதும் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் பொதுமக்களிடம் குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியோ, “தேசியக் குடியுரிமைப் பதிவேடு அஸ்ஸாமில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேறெங்கும் நடைமுறைப்படுத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்லவேயில்லை” என்று அடித்துச்சொன்னார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, “அஸ்ஸாமில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும்” என்று ஊடகங்கள் தொடங்கி மாநிலங்களவை வரை பேசியிருக்கிறார். அமித்ஷா ஒரு குரலில் பேசுவதும் பிரதமர் மோடி வேறொரு குரலில் பேசுவதும், மத்திய அரசிலேயே இத்தனை குழப்பங்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், இத்தகைய நடைமுறைகளால் பொதுமக்களும் ஏராளமான குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். ஆதார் கார்டு நடைமுறைக்கு வந்தபோது, ‘இனி வேறெந்த அடையாள அட்டையும் தேவையில்லை. ஒருவரின் ஆதார் கார்டே போதுமானது’ என்றார்கள். ஆனால் இப்போது வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றுடன் தேசியக் குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிலும் பதிய வேண்டியது அவசியம் என்கிறார்கள். ஆதார் கார்டே ஒருவர் இந்தியக் குடிமகள்/ன் என்பதற்குப் போதுமானது என்று சொல்லப்பட்ட நிலையில், இத்தனை பதிவேடுகளும் அட்டைகளும் மக்களைக் குழப்பாதா?
டிஜிட்டல் முறை என்பதே நடைமுறையை எளிமைப்படுத்தத்தான். ஆனால் மத்திய அரசு கொண்டுவரும் இத்தகைய முறைகளோ இன்னும் நடைமுறையைச் சிக்கலாக்குகின்றன. இந்தக் குழப்பங்களைச் சரிசெய்து பதற்றத்தைத் தணிக்கவேண்டிய பெருங்கடமை மத்திய அரசின் முன் உள்ளது.