பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஆன்லைன் தேர்வு அவசியம்!

ஆன்லைன் தேர்வு அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் தேர்வு அவசியம்!

கீழ்மட்ட அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் என்கிற பெயரில் கைதாகியுள்ளனர்.

‘அரசாங்கம்’ என்கிற வார்த்தை ‘ஊழலின் உறைவிடம்’ என்னும் மறுபொருளாகத்தான் நீண்டகாலமாகவே இங்கு மாற்றப்பட்டுக் கிடக்கிறது. இந்நிலையில், தமிழக அரசுப் பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலேயே நடந்திருக்கும் முறைகேடுகள், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பெரும்பாலான அரசுப் பணியிடங்களுக்கு, தேர்வாணையத் தேர்வுகள் மூலமே ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில், 9,398 பேரைத் தேர்வுசெய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி குரூப் -4 தேர்வுகள் நடத்தப்பட்டன. ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இடங்களில் தேர்வெழுதியவர்கள் பலரும் தரவரிசைப் பட்டியலின் முதற்கட்ட இடங்களை வரிசையாகப் பிடித்தனர். இதுகுறித்து சிலர் சந்தேகத்தை எழுப்பியதை அடுத்தே முறைகேடுகள் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளன. இடைத்தரகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். குறுக்குவழியில் தேர்வாக முயன்ற 99 பேர், வாழ்நாள் முழுவதும் தேர்வாணையத் தேர்வுகள் எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

கீழ்மட்ட அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் என்கிற பெயரில் கைதாகியுள்ளனர். ‘தாசில்தார்கள், தேர்வாணையத்தின் உயரதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும்கூட இதில் தொடர்பு இருக்கக்கூடும்’ என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தாசில்தார்கள் உள்ளிட்டோர் மீதெல்லாம் நடவடிக்கை பாயுமா என்பதுதான், வழக்கம்போல கேள்விக்குறி!

‘2017-ம் ஆண்டு, குரூப்- 2 தேர்வு, குரூப்-1 தேர்வு இவற்றிலெல்லாம் முறைகேடுகள் நடந்தபோது புகார்கள் சொல்லப்பட்டும் நடவடிக்கை இல்லை. எத்தனை ஆண்டுகளாக இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டும். தற்போதைய குரூப் -4 தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாகத் தேர்வு நடத்தவேண்டும்’ என்றெல்லாம் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

‘வறுமையே வாழ்க்கை’ என்ற சூழலுக்கு நடுவேயும், சமூகக் கொடுமைகளுக்கு ஊடேயும் படிப்பை முடித்து, அரசுப்பணிக் கனவுடன் தேர்வுகளை எழுதும் இளைஞர்கள், இந்த முறைகேடுகள் காரணமாகக் கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் சந்தித்துள்ளனர். ‘பணம் கொடுத்துக் குறுக்குவழியில் மட்டும்தான் அரசுப்பணிகளை வாங்கமுடியும்போல’ என்று விரக்தியின் உச்சிக்கே அவர்களெல்லாம் துரத்தப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிகளின் வேர் எதுவரை ஊடுருவியுள்ளது என்று தீவிரமாக விசாரிக்கப்பட்டு, தவறிழைத்தது உச்சபட்ச அதிகாரம் மிக்கவராக இருந்தாலும் கடும்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தேசிய அளவில் பல தேர்வுகளில் கடைப்பிடிப்பதைப்போல ஆன்லைன் மூலம் தேர்வாணையத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க முடியும்; தேர்வு முடிவுகளும் உடனுக்குடன் தெரியவரும். எந்தத் தேர்வுமுறையாக இருந்தாலும் முறைகேடுகளை முற்றாக ஒழிக்க, தீவிரக் கண்காணிப்பு அவசியம்.