
கடந்த பல ஆண்டுகளாகவே காவிரி டெல்டா போராட்ட பூமியாக உள்ளது.
`காவிரிப் படுகையில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்று அறிவித்து இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `சட்ட நிபுணர்களோடு கலந்து பேசிவிட்டு இது தொடர்பாக ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்’ என்றும் அறிவித்திருப்பதோடு ‘ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் காவிரி டெல்டாவில் இனி செயல்படுத்தக்கூடாது’ என்றும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே காவிரி டெல்டா போராட்ட பூமியாக உள்ளது. ஹைட்ரோகார்பன் எடுக்க நூற்றுக்கணக்கான கிணறுகளை அமைத்தால், காவிரி டெல்டாவே மணல் திட்டுகளாக மாறிவிடும்; நிலத்தடி நீர் உப்பாகிவிடும்; பல்லுயிர்ப் பெருக்கம் தடைப்பட்டு, நோய்களின் பெருக்கம் அதிகரிக்கும்; தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகும் ஆகியவற்றை வலியுறுத்தித்தான் மக்கள் நெடுங்காலமாகப் போராடிவந்தனர்.
இப்போது அந்தப் பதற்றத்தைத் தணிக்கும்வகையில் வெளியாகியுள்ள முதல்வரின் அறிவிப்பு தமிழக விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது. ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால், வேளாண்மையைப் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் போன்ற எந்தவொரு தொழிற்சாலைக்கும் அங்கே அனுமதி அளிக்கப்பட மாட்டாது. விவசாயம் சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதேசமயம், ‘புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி தரப்படாது’ என்று அவருடைய அறிவிப்பிலிருக்கும் விஷயம் சற்றே குழப்பத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை. ‘ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதிகளின் நிலை என்ன, ஏற்கெனவே டெல்டா பகுதியில் இருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளின் நிலையென்ன, வேளாண் மண்டலத்தில் எந்தெந்தத் தொழில்கள் அமையவேண்டும் என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்பதுதான் டெல்டா மக்களின் எதிர்பார்ப்பு.
இந்தப் பின்னணியில், ‘ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்‘, ‘ஹைட்ரோகார்பன் ஆய்வு நடத்த மக்கள் கருத்துக் கேட்பும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் தேவையில்லை என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அரசாணை குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டையும் முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்’, ‘காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும்என்ற முதல்வரின் அறிவிப்பைத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்’ ஆகியவையும் அந்த மக்களின் கோரிக்கைகளாக எழுந்திருக்கின்றன.
மேற்கண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலமே இந்த அறிவிப்பு முழுமையடையும் என்பதே உண்மை. அப்போதுதான் ‘இது மனப்பூர்வமான அறிவிப்புதான்; இன்னும் ஓராண்டில் வரவிருக்கும் தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இல்லை’ என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.