கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வாரக் கணக்கில் கார் அல்லது பைக்குகளை வெளியில் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நமக்குப் பிடித்தமான கார் மற்றும் பைக்குகளைப் பற்றிய செய்திகளைப் படிப்பதற்கும், யூ-ட்யூபில் பார்ப்பதற்கும் இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.

அதே போலத்தான் மோட்டார் விகடனையும் ஒரு கட்டுரைகூட விடாமல் படிப்பதற்கும் உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கப் போகிறது. ஹூண்டாய் அறிமுகப்படுத்தி இருக்கும் ஆல் நியூ க்ரெட்டா, டாடாவின் புதிய ஹேரியர், ஃபோர்டின் எண்டேவர், மாருதியின் சுஸூகியின் பிரெஸ்ஸா, ஃபோக்ஸ்வாகனின் டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஜீப் காம்பஸ் போன்ற எஸ்யூவிகள், கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் 200, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான டிவிஎஸ் i-க்யூப், பஜாஜ் சேட்டக், ஏத்தர் 450X...  என்று நீங்களே மலைத்துப் போகும் அளவுக்கு ஏராளமான ஃபர்ஸ்ட் டிரைவ், டெஸ்ட் ட்ரைவ் ரிப்போர்ட்டுகளை இந்த இதழில் கொடுத்திருக்கிறோம்.

இந்த மூன்று வார கால ஊரடங்கு என்பது  மேலும் நீடிக்குமா என்பதும் தெரியாது. நம்முடைய உயிர் மற்றும் உடல்நலம் மட்டுமல்ல, நமது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் இருக்கக் கூடியவர்களின் உடல்நலம் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், இதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை.

மெடிக்கல் எமெர்ஜன்ஸி, அதிஅவசரம் என்றாலொழிய நாம் வாகனத்தை வெளியில் எடுத்துக் கொண்டு செல்லவே கூடாது. அப்படி ஒரு சூழ்நிலை நேர்ந்தால், அப்போது நாம் அதிக விழிப்போடு இருக்க வேண்டும். காரணம் - நாம் பைக்கை நிறுத்திவிட்டு மருந்துக்கடைக்குச் சென்று வெளியில் வருவதற்குள், அதில் யார் கை வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவருக்குக் கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்றும் தெரியாது. அதனால்... விழிப்போடு இருப்போம்.

வாகனங்களை நாம் பயன்படுத்தவில்லை என்பதற்காக, அதைப் பரமாரிக்காமல் விட முடியாது. வெயில் குறைவாக அல்லது நிழலாக இருக்கும் இடத்தில் வாகனங்களை பார்க் செய்வதுதான் நல்லது. அதேபோல கார்/பைக் எதுவானாலும், அதை கவர் கொண்டு மூடி வைப்பது நல்லது. அதற்கு முன்பு விளக்குகள், ஸ்விட்ச்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டனவா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனத்தின் பேட்டரி கேபிள்களைக் கழற்றிவிடுவதுகூட நல்லதுதான். வாகனத்தின் மீது எடை அதிகமான எந்தப் பொருளையும் வைக்காமல் இருப்பதும் நல்லதுதான். இல்லையெனில், இது சஸ்பென்ஷனுக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தரும். எலித்தொல்லை அதிகமாக இருந்தால், அதனைக் கட்டுப்படுத்த காரைச் சுற்றி நாட்டுப் புகையிலையை வைக்கலாம். வாரம் ஒருமுறையாவது, வாகனத்தைச் சுத்தம் செய்வது நல்லது. இதில் வீட்டில் இருக்கும் குழந்தைகளும் இணைந்து கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

தனித்திருப்போம். விழித்திருப்போம். படித்திருப்போம்!

அன்புடன்

ஆசிரியர்