சினிமா
தொடர்கள்
Published:Updated:

இயங்க வேண்டும் எதிர்க்கட்சி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஜனநாயகம் என்னும் வாகனத்துக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும்தான் சக்கரங்கள்.

ப்போதுள்ள நிலையில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி அசுர பலத்துடன் திகழ்கிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸோ தன் உள்முரண்பாடுகளால் செயலற்றுக்கிடக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து செல்வாக்குப்பெற்று விளங்கிய காங்கிரஸ், வரலாற்றில் இதுபோல எப்போதும் சுணக்கம் கண்டதில்லை. நெருக்கடிநிலையைக் கொண்டுவந்து மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதித்தார் இந்திராகாந்தி. அடுத்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தபோதும் சோர்ந்து போகாமல், அதற்கடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியைத் தயார் செய்தார் அவர்.

ராஜீவ் மரணத்துக்குப் பிறகு நேரு குடும்பத்துக்கு வெளியிலிருந்து நரசிம்மராவ், மன்மோகன்சிங் போன்றவர்கள் பிரதமராக வந்து தொடர்ந்து ஆட்சி செய்தனர். காங்கிரஸும் அரசியல் கட்சி என்றளவில் உயிர்ப்புடன் இயங்கிவந்தது. அதுவும் இரண்டாவது முறையாக மன்மோகன்சிங் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் தன்னைத் தக்கவைத்துக்கொண்டது.

ஆனால் இப்போதோ எதிர்க்கட்சியான காங்கிரஸ், மேய்ப்பர் இல்லாத மந்தையைப்போல் சோர்ந்து, சுணங்கி, திசையறியாது கிடக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல்காந்தி முன்வந்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் குறுநில மன்னர்களைப்போல் ஆதிக்கம் செலுத்துவதும், கட்சியின் வளர்ச்சியைவிட தங்கள் வாரிசுகளின் வளர்ச்சியிலேயே அவர்கள் அக்கறை காட்டுவதும்தான் காங்கிரஸின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று ராகுல்காந்தி பொதுக்குழுவில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியதாகத் தகவல்கள் வெளிவந்தன. பலரின் வேண்டுகோளையும் மறுத்து, தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் ராகுல் காந்தி. தலைமை இல்லாததாலேயே யாருடைய ஆணையைப் பின்பற்றுவது என்று தெரியாமல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகைத்து நிற்கிறார்கள். முக்கியமான பிரச்னைகளில் திரிணாமூல் காங்கிரஸ் தொடங்கி தி.மு.க வரையுள்ள எதிர்க்கட்சியினர் தங்கள் நிலைப்பாடுகளை ஆணித்தரமாக முன்வைக்கிறார்கள். ஆனால் காங்கிரஸோ, இன்னும் நாடாளுமன்றத்தில் செயல்படவே ஆரம்பிக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 13 ஆண்டுக்காலம் ஆட்சிப்பொறுப்பில் இல்லாதபோதும் தன் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார் கருணாநிதி. தி.மு.க-வும் சரி, அ.தி.மு.க-வும் சரி, தேர்தல்களில் படுதோல்விகளைச் சந்தித்தபோதும் இயங்குவதைக் கைவிட்டதில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்தும் காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.

காங்கிரஸ் என்ற தனிப்பட்ட கட்சியின் மீதான அக்கறையல்ல இது; இந்திய ஜனநாயகத்தின் மீதான அக்கறை. ஆளுங்கட்சி அசுர பலத்தில் இருக்கும்போது, முதன்மை எதிர்க்கட்சி குறைந்த உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், தேவையான நேரங்களில் எதிர்க்குரல் கொடுப்பதும் ஆளுங்கட்சி திசைமாறிப் போகாமல் நெறிப்படுத்துவதும் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்க அவசியம்.

புறநானூறு ஓங்கி ஒலித்த இந்திய நாடாளுமன்றத்துக்கு, எக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறளை நினைவுபடுத்துகிறோம்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.