சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அரசுக்கு அழகல்ல!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட பாதைகளைத் தாண்டி பல சாலைகளில் நுழைந்து பேரணி நடத்தியது, போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டது, செங்கோட்டையில் அத்துமீறிச் சென்று சீக்கியக் கொடியை ஏற்றியது ஆகிய எல்லாமே கண்டிக்கத்தக்க செயல்கள். எந்த விஷயத்துக்குமே வன்முறை தீர்வாகாது. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த அத்துமீறலை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்காக அன்று நடந்த அசம்பாவிதங்களை மட்டுமே வைத்து, போராடும் விவசாயிகள் அனைவரையும் ‘வன்முறையாளர்கள்’ என முத்திரை குத்துவது தவறு. தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதிவழியில் போராடிவருகிறார்கள் விவசாயிகள். ஒரு நாளில் சில மணி நேரம் நடந்த நிகழ்வுகளை மட்டுமே வைத்து அந்தப் போராட்டத்தை மதிப்பிடுவதும் சரியல்ல. நிகழ்ந்த வன்முறைகளை விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் பலரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ‘இந்த வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை’ எனப் பெரும்பாலான விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன. இது எந்த அளவு உண்மை என்பது முறையான விசாரணையில் தெரியவரும்.

அதேநேரத்தில் விவசாயச் சங்கத் தலைவர்கள்மீது வழக்குகள் போடுவது, போராடும் விவசாயிகளுக்கான குடிநீர் மற்றும் மின்சார சப்ளையைத் துண்டிப்பது எனத் தொடரும் நடவடிக்கைகள் பலவும், ‘நடந்த வன்முறையையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு நினைக்கிறதோ’ என நினைக்க வைக்கின்றன.

இன்னொரு பக்கம், இந்தச் சூழலை வைத்துப் பத்திரிகையாளர்கள்மீதும் வழக்கு பதிவு செய்யப்படுவது கவலையளிக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் மரணமடைந்த விதம் குறித்து சமூக வலைதளங்களில் எழுதிய பத்திரிகையாளர்களே குறி வைக்கப்பட்டுள்ளனர். ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாண்டே, ஜாஃபர் ஆகா, பரேஷ் நாத் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள்மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. தேசத்துரோகம், வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான பல வழக்குகள் பதிவு செய்யப்படுவது, நிச்சயம் தற்செயலான ஒன்றல்ல. இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் இதை வன்மையாகக் கண்டித்துள்ளது.

எதிர்க்கருத்துகள் சொல்பவர்கள் எல்லோரும் எதிரிகளும் அல்லர்; தேசவிரோதிகளும் அல்லர். கருத்தும் எதிர்க்கருத்தும் இருதரப்பினராலும் விவாதிக்கப்படும்போதே, எல்லோருக்கும் பயன் தரக்கூடிய முடிவுகள் கிடைக்கும். அந்த நம்பிக்கையில்தான் ஜனநாயகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் எழுதுகிறார்கள்.

பத்திரிகையாளர்கள் உட்பட யாருமே சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் தவறிழைத்தால் அதற்குரிய சட்டப்பிரிவுகளின்படி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அதற்காக கருத்துச் சுதந்திரத்துக்கே தடைபோடும்விதமாக தேசத் துரோகம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அச்சுறுத்துவது அரசுக்கு அழகல்ல.