சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

செய்ய முடிவதைச் சொல்லுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது இப்போது சாத்தியமில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றிக் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம், ‘எப்போது குறைக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் தேதி ஏதாவது போட்டிருக்கிறதா?’ என்றும் கேட்டிருக்கிறார்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைப்பதன் மூலமே அவற்றின் விலையைக் குறைக்க முடியும். ‘செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலமே பெட்ரோலியப் பொருள்களின் வரிகள் சமீபகாலத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டன. இவற்றில் மாநில அரசுகளுக்குப் பங்கு வருவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாட் வரியைக் குறைப்பதால் மாநிலத்துக்கு இழப்பு ஏற்படும். இப்போது விலையைக் குறைக்க முடியாது என்றாலும், எங்கள் ஆட்சிக்காலத்துக்குள் இதைச் செய்வோம்’ என்பது நிதியமைச்சரின் வாதம்.

மாநிலத்தின் நிதிநிலைமை அவர் அறியாதது அல்ல. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களில் கலந்துகொண்டவர் அவர். சொல்லப்போனால், தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே ‘மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பது தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்கியவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆட்சிக்கு வந்த நாள் முதல் நேர்மறையான அணுகுமுறைகள் மூலம் தி.மு.க அரசு பாராட்டைப் பெற்றுவருகிறது. ஜெயரஞ்சன் தலைமையில் தமிழக அரசின் மாநிலக் கொள்கை வளர்ச்சிக் குழுவை அமைத்தது முதல் இப்போது ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரெஸ், எஸ்.நாராயண் ஆகியோரை தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்தது வரை எல்லாமே வரவேற்பு பெற்ற அறிவிப்புகள்.

தலையங்கம்
தலையங்கம்

பால் விலைக்குறைப்பு, பெண்கள் மற்றும் திருநர் சமூகத்துக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் எனத் தேர்தல் வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குறைப்பு விவகாரம் முதல் சறுக்கலாக அமைந்துள்ளது. ‘சொன்னதைச் செய்வோம்... செய்வதையே சொல்வோம்’ என்பது தி.மு.க-வின் தேர்தல் முழக்கம். ‘செய்ய இயலாததை ஏன் சொல்ல வேண்டும்’ என்ற கேள்வியை இப்போது நிதியமைச்சரின் அறிவிப்பு எழுப்பியுள்ளது. தி.மு.க கொடுத்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் பலவும் அரசுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துபவை. அவற்றின் நிலை என்ன ஆகும் என்ற சந்தேகம் இந்தத் தருணத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

‘ஒவ்வொரு மாதத்தின் முதல் பணிநாளன்றும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆய்வு செய்வார். அதைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து அரசின் ரிப்போர்ட் கார்டை வழங்குவார்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க குறிப்பிட்டிருந்தது. அதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.