
தலையங்கம்
எவ்வளவோ தொழில்நுட்ப மாற்றங்களும் புதுப்புது வேலைவாய்ப்புகளும் வந்தபிறகும், அரசு வேலைமீதான ஈர்ப்பு நம் இளைஞர்கள் மத்தியில் குறையவில்லை. நேர்மையான முறையில் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாகப் படித்துத் தயாராகிவரும் சூழலில், குறுக்கு வழியில் அவற்றை அபகரிக்கும் நபர்களும் பெருகியுள்ளார்கள் என்பது வேதனை.
வட மாநிலங்கள் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 300 பேர், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படித்ததாகப் போலிச் சான்றிதழைக் கொடுத்துப் பல்வேறு மத்திய அரசு நிறுவனப் பணிகளில் இணைந்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அஞ்சல் துறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியில் சேர்ந்துள்ளனர்.
அஞ்சல்துறையும் கர்நாடகக் காவல் துறையும் இவர்களில் பலருடைய சான்றிதழ்களைச் சரிபார்க்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியபோதுதான் அவற்றில் பலவும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகக் கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் இதுபோன்ற போலிச் சான்றிதழ்களை உருவாக்கித் தரும் கும்பல் மீது அம்மாநிலக் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மழைக்குக்கூட ஒதுங்காத பல வெளிமாநிலத்தவர்கள், தமிழகத்தில் படித்ததாகச் சொல்லி, போலிச் சான்றிதழையும் தயாரித்து, அதன் அடிப்படையில் மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்து பணிபுரிந்துவருகிறார்கள். இதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் துறையில் பணியாற்றத் தேர்வான வெளிமாநிலத்தினர் பலர், தமிழ் மொழித் தேர்வில் தமிழக மாணவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்றிருந்ததும் சர்ச்சையானது. மேலும் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணி நிரந்தரம் பெறாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வந்த சூழ்நிலையில், வடமாநிலங்களைச் சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணி நியமனம் பெற்றதும், அதையொட்டி நடைபெற்ற போராட்டங்களும் மக்கள் மனதில் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் ஒரு கும்பல் விடைத்தாள்களையே மாற்றி மோசடியில் ஈடுபட்டது. இடைத்தரகர்களும் தேர்வாணையப் பணியாளர்களும் இணைந்து நடத்திய இந்த மோசடி தொடர்பாக 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற முறைகேடுகளும் மோசடிகளும், நேர்மையான முறையில் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். எவ்வளவோ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், போலியாகச் செய்யமுடியாதபடி கடுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் கல்விச் சான்றிதழ்களை வடிவமைக்க முடியாதா? மோசடி செய்யமுடியாதபடி தேர்வுகளைத்தான் நடத்த முடியாதா?
பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்விச் சான்றிதழ்களை வழங்கமுடியும் என நிதி ஆயோக் கூறியுள்ளது. மகாராஷ்டிரா அரசு சாதிச் சான்றிதழை பிளாக்செயின் தொழில்நுட்பத்துடன் இனி சரிபார்க்க இருக்கிறது. க்யூஆர் கோடுடன் வழங்கப்படும் சான்றிதழின் அத்தனை தகவல்களும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேமிக்கப்படும். அந்தச் சான்றிதழை எந்த அரசுத்துறையும் சோதித்து, அது உண்மையா, போலியா என அறிய முடியும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாகச் செயலில் இறங்கி, இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.