சினிமா
Published:Updated:

கறை நல்லதல்ல!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

இந்தியாவில் பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரம், குடியரசுத் தலைவரின் கொடியைப் பெறுவது. தென் மாநிலங்களிலேயே முதல்முதலாக தமிழகக் காவல்துறையினர் இதைப் பெற்றிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அரசுச் சின்னமான கோபுரம், தமிழகக் காவல்துறையின் சின்னம் ஆகியவற்றுடன் ‘வாய்மையே வெல்லும்' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுச் சிறப்புப் பட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இது இனி டி.ஜி.பி முதல் கடைநிலைக் காவலர்கள்வரை அனைவரது சீருடையையும் அலங்கரிக்கும்.

தமிழகக் காவல்துறைக்கு இது பெருமை மிகுந்த தருணம். ஆனால், இந்தக் கடைநிலைக் காவலர்களில் கணிசமானோர், இந்தக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் சீருடையை அணிந்துகொண்டு என்ன வேலை செய்யப்போகிறார்கள்? ஆர்டர்லி என்ற பெயரில் உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் துணிதுவைப்பது, வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துப் போவது, காய்கறி வாங்கித் தருவது போன்ற வேலைகளைப் பார்க்கப்போகிறார்கள்.

இது அந்தக் காவலர்களுக்கும் பெருமையில்லை. அவர்களை அறிவிக்கப்படாத அடிமைகளாக வைத்திருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் பெருமையில்லை. 1979-ம் ஆண்டே தமிழக அரசு இந்த ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. ஆனாலும் தங்கள் வீடுகளில் எடுபிடி வேலை செய்யும் காவலர்களை விடுவிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு மனமில்லை.

`காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்தப் பிரச்னை நீதிமன்றத்தின் பார்வைக்கு வரும் நேரங்களில் மட்டும், `அதோ, இதோ' என்று போக்கு காட்டும் காவல்துறை அதிகாரிகள், அதன்பிறகு இந்த விஷயத்தை மறந்துவிடுகின்றனர்.

இப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ``காவல்துறையினர் எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? வீட்டு வேலை செய்வதற்கா? குடிமக்கள்தான் இந்த நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள். அதிகாரிகளாகிய நாம் எல்லோரும் சேவகர்கள்தான். 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இந்த வேளையிலும் ஆங்கிலேயர்களின் ஆர்டர்லி முறையை நாம் பின்பற்றுவது வெட்கக்கேடானது. துப்பாக்கி தூக்க வேண்டிய கைகளால் சப்பாத்தி சுடும் அவலம் நிலவுகிறது'' என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று டி.ஜி.பி-யிடம் அவர் விளக்கம் கேட்டிருக்கிறார்.

`1859-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகக் காவல் துறை, நாட்டில் உள்ள மிகச் சிறந்த போலீஸ் படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது' என்று சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியது வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை. குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், குற்ற வழக்குகளை விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் உலகத்திலேயே புகழ்பெற்ற ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸாரோடு ஒப்பிடும் அளவுக்கு சரித்திரமும் பாரம்பரியமும் தமிழகக் காவல் துறைக்கு உண்டு. ஆர்டர்லி முறை, அந்த வரலாற்றில் படிந்திருக்கும் கறை.

ஆயிரம் கனவுகளோடு காவல்துறைக்குள் கம்பீரமாக அடியெடுத்து வைக்கும் இளைஞர்களை ஆர்டர்லிகளாக மாற்றும் கொடுமையை உடனடியாக ஒழித்தால்தான் தமிழகக் காவல் துறை அதிகாரிகள்மீதிருக்கும் கறை அழியும்.