Published:Updated:

ஏன் இத்தனை குழப்பங்கள்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கல்வி தொடர்பான தமிழக அரசின் முடிவுகள் எப்போதும் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பத்தை விளைவிப்பதாகவும் இருக்கின்றன. இது குழந்தைகளின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

நீட் தேர்வு தொடங்கி பல உதாரணங்களைச் சொல்லலாம். இரண்டாண்டுகள் நீட் தேர்வுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத தமிழக அரசு, திடீரென்று ஒருநாள் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

அதேபோல் `ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு' என்று புதிய கல்விக்கொள்கை பரிந்துரை முன்வைக்கப்பட்டு சர்ச்சையானபோது `தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படாது' என்று உறுதியளித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அவரே சிலமாதங்களில் `ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு' என்று அறிவித்தார். பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தபோதும் `தகுதியை அதிகப்படுத்த பொதுத்தேர்வு அவசியம்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் செங்கோட்டையனும் உறுதியாக நின்றார்கள். ஆனால் கொரோனா காரணமாக எந்த வகுப்புக்கும் தேர்வே நடைபெறவில்லை.

`பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஜூன் 1ஆம் தேதி நடத்தப்படும்' என்று அறிவித்த செங்கோட்டையன், சிலநாள்களிலேயே `ஜூன் 15ஆம் தேதி நடத்தப்படும்' என்று தேதியை மாற்றினார். தேதி ஏன் மாற்றப்பட்டது என்பதற்கு முறையான எந்த விளக்கமும் இல்லை. `ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்' என்று மத்திய அரசு இப்போது அறிவித்துள்ள நிலையில் வெளியூருக்கு மாணவர்கள் சென்றிருந்தால் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்ததாகத் தெரியவில்லை.

சமீபத்தில் `தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பேட்டியளித்த செங்கோட்டையன், அன்று மதியமே `தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் தடையில்லை' என்றார். நிலைப்பாட்டில் ஏன் மாற்றம் என்று தெரிவிக்கப்படவில்லை. எப்போது பள்ளிகளைத் திறக்கலாம், பாடத்திட்டத்தைக் குறைக்கலாமா என்று தமிழக அரசு ஒரு கமிட்டியை அமைத்துள்ள நிலையில், எந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்பதிலும் தெளிவில்லை. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியப்படலாம். ஆனால் அடித்தட்டு மக்கள் அதிகம் நம்பியுள்ள அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு இது எப்படி சாத்தியம், இதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைத் தமிழக அரசு உருவாக்கித் தருமா என்று ஏராளமான கேள்விகள் உள்ளன.

தனது குழப்பமான நிலைப்பாடுகளைக் கைவிட்டுவிட்டுக் கல்வி தொடர்பாகத் தெளிவான முடிவுகளை அறிவிக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். இது குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்னை; தமிழகத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்னை.