கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும், கொரோனாவைக் கொடுக்கும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கொரோனா காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு பல தீமைகளை இழைத்திருந்தாலும், சில நன்மைகளையும் விளைவிக்காமலில்லை. அவற்றில் ஒன்று டாஸ்மாக் கடைகள் மூடல். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பலர் மதுவருந்தும் பழக்கத்திலிருந்தும் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்தும் விடுபட்டுள்ளனர். ‘சாதாரண மக்கள் மதுவைக் கைவிட்டாலும் நாங்கள் மதுவிற்பனையைக் கைவிட மாட்டோம்’ என்று தமிழக அரசு அடம்பிடிப்பதுதான் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நிறுவனங்களும் கல்விநிறுவனங்களும் மூடியிருக்கும் நிலையில் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் அவசரமும் ஆர்வமும் காட்டியது தமிழக அரசு. டாஸ்மாக்கில் கொரோனாவைத் தடுப்பதற்கான பாதுகாப்புமுறைகள், சமூக இடைவெளி ஆகியவை காற்றில் பறக்கவிடப்பட்டதால் கொரோனா அபாயம் அதிகரித்துள்ளது.

‘மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது; வேண்டுமானால் ஆன்லைனில் விற்பனை செய்துகொள்ளலாம்’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும் ‘இல்லையில்லை, டாஸ்மாக் கடைகளைத் திறந்தே தீருவோம்’ என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது மக்கள்விரோதச் செயல். கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகச் செய்யாததால் கொரோனா ஹாட்ஸ்பாட்டாகக் கோயம்பேடு மாறியிருக்கிறது. சென்னையைத் தாண்டித் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் கோயம்பேடு மூலம் கொரோனாத் தொற்று பரவியுள்ளது. இப்போது டாஸ்மாக் கடைகளைத் திறப்பதன்மூலம் தமிழக அரசு தெரிந்தே தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொரோனாப் பரவல் மையங்களை உருவாக்கப்போகிறது.

இன்னொருபுறம் கோயம்பேடு மூடியிருப்பதால் சென்னையில் காய்கறித் தட்டுப்பாடும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் காய்கறிகள் விலை உயர்வும் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர். அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விநியோகத்தைச் சரிசெய்வதில் கவனம் செலுத்தவேண்டிய தமிழக அரசோ, டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் ஆர்வம் காட்டுவது வெட்கக்கேடு. ‘அண்டைமாநிலங்களில் மதுக்கடைகளைத் திறப்பதால்தான் நாங்களும் திறக்கிறோம்’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறது தமிழக அரசு. ஆனால் ‘ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளைத் திறக்கப்போவதில்லை’ என்று கேரள அரசு அறிவித்துவிட்டது. புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கப்போவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் மக்கள்நலனில் அக்கறையின்றி மதுவிற்பனையில் ஆர்வம் காட்டுகிறது.

ஏற்கெனவே ஊரடங்கால் வருமானம் இழந்து அடித்தட்டு மக்கள் அவதியுறுகிறார்கள். இப்போது டாஸ்மாக் கடைகளைத் திறப்பது அவர்களின் குடும்பங்களில் இருக்கும் சொற்பப் பணத்தையும் வழிப்பறி செய்வதற்குச் சமம். ஊரடங்கு காரணமாகக் குறைந்திருக்கும் குற்றங்கள் டாஸ்மாக் காரணமாக அதிகரிக்கப்போகின்றன என்பதற்கு டாஸ்மாக் திறந்த முதல்நாள் நடந்த குற்றங்களே சாட்சி. கொரோனாப் பரவலுக்கு வாய்ப்பளிப்பது, அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, குற்றங்களை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு வித்திடும் அ.தி.மு.க அரசை வரலாறும் மன்னிக்காது; மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.