கட்டுரைகள்
Published:Updated:

மனிதநேயமும் விழிப்புணர்வும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால், சில தொழில்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து மே 3 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்தக் காலகட்டத்தில் அரசும் பொதுமக்களும் மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாத விஷயங்கள் பற்றிச் சிந்திக்கவேண்டியது அவசியம்.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அரசுக்குத் துணையாக இந்திய மக்கள் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கும் பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டிய அவசியமான சில அடிப்படைக் கடமைகளைச் செய்துள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. கொரோனா சிகிச்சையின் அடிப்படையே எத்தனை பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது என்பதுதான். 10 லட்சம் பேருக்கு - தென் கொரியாவில் 10,426, பிரான்ஸில் 5,114 , ஈராக்கில் 1,130 என்று உலகம் முழுவதும் பல நாடுகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 177 என்ற அளவில்தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பரிசோதனைக் கருவிகளை அதிகப்படுத்திக் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்வது, மருத்துவப் பணியாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக் கருவிகளை அளிப்பது ஆகியவற்றின் மூலம்தான் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெல்ல முடியும் என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

‘சொந்த மாநிலத்துக்குச் செல்ல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் திரண்டதைக் கண்டோம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்குச் செல்வதற்காகக் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி, காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர். மருத்துவ நெருக்கடி ஒருபுறம், பொருளாதார ரீதியாகக் கடுமையான பாதிப்புகள் மறுபுறம் என்று அவதிப்படும் அடித்தட்டு மக்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களின் துயரங்களைப் போக்குவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

அரசு இயந்திரத்தில் மட்டும்தான் பிரச்னையா? கொடுமையான நோய்க்காலத்திலும் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வும் மனிதநேயமும் இல்லாமல் இருப்பது பேரவலம். நம்மில் பெரும்பாலோர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்போது மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள் போன்ற மிகச்சிலர் நமக்காக வெளியில் சென்று உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒருபுறம் நன்றி தெரிவித்துக்கொண்டே, இன்னொருபுறம் ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது கொஞ்சமும் மனிதநேயமற்ற செயல்.

இன்னொருபுறம் விதிமுறைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் இன்னும் பொறுப்பில்லாமல் சுற்றித் திரிகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழகத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களைவிட, விதிமுறைகளை மீறியதாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்றால், நாம் இன்னும் இந்த நோயின் தீவிரத்தை உணரவில்லை என்றுதான் அர்த்தம்.

மே 3-க்குப் பிறகும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு பொதுமக்களாகிய நம் கையில்தான் இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மனிதநேயமும் விழிப்புணர்வும்தான் மகத்தான ஆயுதங்கள். அவற்றைக் கடைப்பிடித்தால்தான் நம்மால் கொரோனாவை வெல்ல முடியும்.