Published:Updated:

உண்மையான ‘சுயச்சார்பு இந்தியா!’

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு `சுயச்சார்பு இந்தியா' என்ற பெயரில், மாபெரும் ஒரு மீட்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இருப்பதைப்போலவே ஏராளமான சந்தேகங்களும் இருக்கின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 3 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடனுதவி, விவசாயக் கட்டமைப்பை மேம்படுத்த மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகிய நிதியமைச்சரின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கான வரையறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்திருப்பதன் மூலம், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான பாதையை மத்திய அரசு அமைத்துள்ளது.

நெருக்கடியான நிலையில் மத்திய அரசின் இந்த முன்னெடுப்பை வரவேற்கும் அதே நேரத்தில், மக்கள் மத்தியில் எழும் சில சந்தேகங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். அமைப்புசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த நிவாரணத்தொகையும் இந்த 20 லட்சம் கோடியில் அடக்கமா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. மேலும் `அடித்தட்டு மக்களின் கைகளில் பணத்தைக் கொடுத்தால்தான், அவர்கள் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவார்கள். அதனால் உற்பத்தி பெருகும். ஆனால் அவர்கள் கைகளில் நிதியைக் கொண்டுசேர்க்காமல் வெறுமனே தொழில்முனைவோர்களுக்குக் கடனுதவி வழங்குவதால் பயனில்லை' என்று முன்வைக்கப்படும் வாதத்தில் உள்ள நியாயத்தைப் பரிசீலிக்க வேண்டும். `விவசாயிகள் மாநிலம் விட்டு மாநிலம் விளைபொருள்களை விற்கலாம்' என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு, பினாமி பெயரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வைத்துள்ளவர்களுக்குத்தான் உதவும். விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவைதான் விவசாயத்தை வளர்க்க உதவும்.

மாநில அரசுகள் வருவாய் இன்றித் தவிக்கும் நிலையில் நியாயமாக அம்மாநிலங்களுக்குச் சேரவேண்டிய ஜி.எஸ்.டி பங்கை அளிக்க வேண்டியதும் கொரோனாவின் பாதிப்புக்கு ஏற்ப மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டியதும் மத்திய அரசின் முக்கியமான கடமைகள். ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அந்நிய முதலீடுகளையும், சீனாவில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைகளையும் ஈர்க்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்துவரும் அதே வேளையில் `சுயச்சார்பு இந்தியா' என்ற புதிய முழக்கத்தைப் பிரதமர் முன்வைத்திருக்கிறார். எந்தெந்தத் துறைகளில் சுயச்சார்பு, எந்தெந்தத் துறைகளில் அந்நிய முதலீடு என்று தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.

இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாட்டின் அடித்தளமாக விளங்கும் அடித்தட்டு மக்கள் சுயச்சார்புடனும் தன்னிறைவுடனும் வாழும் வாழ்க்கையை உருவாக்கும்போதுதான் `சுயச்சார்பு இந்தியா' என்ற வார்த்தையின் நோக்கம் நிறைவேறும்.