கட்டுரைகள்
Published:Updated:

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

தலையங்கம்
News
தலையங்கம்

வணக்கம்

அன்பார்ந்த ஆனந்த விகடன் வாசகர்களுக்கு...

அச்சு இதழ் மூலமாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களைக் காணாமல் நாங்களும் எங்களைக் காணாமல் நீங்களும் தவித்த தவிப்புக்கும் ஏக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டை நோக்கிய ஆனந்த விகடன் பயணத்துக்கு என்றும் அடித்தளமாக இருப்பவர்கள் ஆனந்த விகடன் வாசகர்களே. உங்களின் தொடர்ச்சியான ஊக்கமும் வரவேற்புமே எங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.

94 ஆண்டுக்கால விகடனின் வரலாற்றில் எப்போதும் சந்தித்திராத புதிய அனுபவத்தைச் சந்தித்தோம். உலகையே அச்சுறுத்தும் கொரோனாப் பரவலைத் தடுக்கும்விதமாக நாம் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துவருகிறோம். கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவால் வாசகர்கள் வெளியில் வந்து ஆனந்த விகடன் இதழை வாங்க முடியாத சூழல்; கடைகள் குறைவாகவே திறந்திருக்கும் நிலை; எங்கள் இதழ்களை உங்களிடம் கொண்டு சேர்க்கும் விநியோகஸ்தர்களின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டு கடந்த மூன்று வாரங்களாக ஆனந்த விகடன் அச்சு இதழைக் கொண்டுவர முடியவில்லை.

ஆனாலும் விகடன் இணையதளத்திலும் விகடன் செயலியிலும் (ஆப்)ஆனந்த விகடன் இதழ்களைப் பதிவேற்றியிருந்தோம். லட்சக்கணக்கான வாசகர்கள் விகடன் இணையதளம் மூலமாகவும் விகடன் செயலியைப் பதிவிறக்கம் செய்தும் ஆனந்த விகடன் இதழ்களைப் படித்துவந்தார்கள். இந்த நெருக்கடியான சூழலில் எப்போதும்போல் தொடர்ந்து பேராதரவு வழங்கிய ஆனந்த விகடன் வாசகர்கள், அச்சு இதழைக் கொண்டுவர முடியாத சிறிய இடைவேளையைப் பொறுத்துக்கொண்ட ஆனந்த விகடன் முகவர்கள், கடைக்காரர்கள், விற்பனையாளர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறான் விகடன்.

‘அச்சு இதழைப் படிக்க வேண்டும்; புத்தக வாசனையோடு ஆனந்த விகடனின் சுவையான கட்டுரைகளை நுகர வேண்டும்’ என்ற வாசகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்விதமாக, இதோ உங்கள் கைகளில் ஆனந்த விகடன் இதழ் தவழ்கிறது.

மே 3 வரை ஊரடங்கு தொடர்ந்தாலும் ‘ஏப்ரல் 20 முதல் சில அத்தியாவசியத் தொழில்களுக்கு அனுமதி’ என்று மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. வெளியில் சென்று இந்த அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுபவர்களில் கணிசமான ஆனந்த விகடன் வாசகர்களும் இருப்பீர்கள். ‘நாம் இன்னும் முழுமையாக கொரோனா அபாயத்திலிருந்து மீளவில்லை’ என்ற எச்சரிக்கையுணர்வுடன் நீங்கள் இந்தத் தளர்வுக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யாருக்குத் தேவை இருக்கிறதோ, எந்தெந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களெல்லாம் வேலைக்குச் செல்லலாம் என்று அரசு அனுமதி கொடுத்திருக்கிறதோ, அந்தந்தத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் முகக்கவசம், சானிட்டைசர், சமூக இடைவெளி ஆகிய பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்துப் பணிபுரிய வேண்டியது அவசியம். மற்றவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்பதும், அவசரக் காரணங்களுக்காக வெளியில் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளையும் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். ஆனந்த விகடன் வாசகர்களாகிய உங்கள் உடல்நலமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக மிக முக்கியம்.

கொரோனா வைரஸ் வெறுமனே நோய் குறித்த அச்சத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆனந்த விகடன் சார்பில், வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இதற்காக, வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ஆனந்த விகடன் பங்காக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்காக வாசகர்களும் நிதியுதவி அளிக்கலாம். மேலும், ஏப்ரல் மாதத்தில், வாசகர்கள் வாங்கும் விகடன் குழும இதழ்களின் சந்தா, ஆன்லைன் சந்தா, விளம்பரங்கள், பிரசுர புத்தகங்கள் உள்ளிட்டவை மூலம் கிடைக்கும் வருவாயில் 10 சதவிகிதத் தொகையும் இந்தச் சேவைக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று உலகம் மாறியிருக்கிறது. ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற பாரதியின் வரிகள் நனவாகியிருக்கின்றன. நமது வாழ்க்கைமுறை, பொருளாதாரச் சூழல், ரசனைகள் என அனைத்தும் மாறியிருக்கின்றன. அலுவலகத்திலிருந்து அனைவரும் இணைந்து பணிபுரிந்துவந்த ஆனந்த விகடன் ஆசிரியர் குழு, இப்போது வீட்டில் இருந்தே பணிபுரிகிறோம். எங்கள் ஆசிரியர் குழு, நிருபர்கள், வடிவமைப்பாளர்கள் வீட்டில் இருந்தபடியும் வெளியில் செல்லும் புகைப்படக்கலைஞர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், விளம்பரப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு முறைகளையும் சமூக இடைவெளியையும் கடைப்பிடித்தும் இதழ் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்பவர்களே நிலைத்து நிற்பார்கள் என்பதை மனிதகுல வரலாறு நிரூபித்திருக்கிறது. கொரோனா அபாயம் நமக்கு உணர்த்தும் செய்தியும் அதுவே. நாம் அனைவரும் புதிய வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் தயாராவோம். காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யும் ஆனந்த விகடன் இதழ்களில் நீங்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத மாற்றங்களைக் காணப்போகிறீர்கள். உங்களுக்காகப் புதிய பகுதிகள், புதிய வடிவமைப்பு, புதிய உள்ளடக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கப்போகிறோம். உங்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்வதே எங்களின் பணி.

ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 வரை வீட்டிலேயே தனித்திருங்கள்; விகடனோடு இணைந்திருங்கள்!

பா.சீனிவாசன்

ஆசிரியர்

ஆனந்த விகடன்