Published:Updated:

மனசாட்சியே கிடையாதா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் அதிர்ச்சி மரணங்கள், தமிழகத்தைத் தாண்டியும், உலகளவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர்கள்மீதான குற்றச்சாட்டு, ‘ஊரடங்கு நேரத்தில் விதியை மீறிக் கடையைத் திறந்து வைத்திருந்தார்கள்’ என்பதுதான்.

கொத்தாகக் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இருவரும், காவல்நிலைய விசாரணைக்குப் பிறகு, நீதிபதியின் உத்தரவின்படி கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆனால், சில மணி நேரத்தில் இருவருமே அடுத்தடுத்து இறந்துபோக, ‘உடல்நலக்குறைவு’ என்று வழக்கமான காரணத்தைச் சொல்லிக் கதையை முடிக்கப் பார்த்தது காவல்துறை. ஆனால் இந்தத் தடவை அது எடுபடவில்லை. ‘காவலர்களின் கண்மூடித்தனமான, கொடூரமான தாக்குதல்தான் இருவரின் உயிரையும் பறித்துவிட்டது’ என்கிற உண்மை வெளியில் பரவி, காவல்துறையினர் நடத்திய கொலைவெறித்தாண்டவத்தை உலகுக்கே வெளிச்சம் போட்டுவிட்டது.

இதைவிடக் கொடுமை, ‘கருணையே உருவான’ மருத்துவரும், ‘நேர்மையே வடிவான’ நீதிபதியும் இந்த விஷயத்தில் நடந்துகொண்ட விதம். ரத்தவிளாறாகக் கொண்டுவரப்பட்டவர்களைப் பார்த்து, பதறி சிகிச்சைக்கு உத்தரவிட வேண்டிய நீதிபதி, அவர்களைச் சிறைக்கு அனுப்பியிருக்கிறார்; கடும் தாக்குதலால் சிதைக்கப்பட்டவர்களைப் பார்த்தபின்னும், ‘ஆரோக்கியச் சான்று’ கொடுத்திருக்கிறார் அரசு மருத்துவர்; சதைப்பந்துகளாகக் கொண்டுவந்து வீசப்பட்டவர்களை எந்த மறுப்புமின்றிச் சிறைக்குள் அடைத்திருக்கிறார்கள் சிறைத்துறையினர். ‘எந்த இடத்திலும் இவர்களுக்கு மனசாட்சி உறுத்தவே இல்லையா?’ என்று கலங்கும் மக்களின் கேள்விகளுக்குப் பதில் இல்லை.

‘சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை, கொரோனா போல மற்றொரு தொற்றுநோய்’ என்று உயர் நீதிமன்றமே சாடித்தள்ளும் அளவுக்கு மனித உரிமை கொடூரமாக மீறப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு குற்ற ஆவணப் பதிவுகளின்படி, இந்தியாவில் லாக்-அப் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருக்கிறது தமிழ்நாடு. இந்த ஆண்டில் காவல்துறையினர்மீது பதியப்பட்ட வழக்கு 71. ஆனால், ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. காவல்துறையினரின் எதேச்சாதிகாரப் போக்கும், தங்களின் அடியாள்களாகவே செயல்படுவதால் ஆளும் அரசியல்வாதிகள் தரும் அரவணைப்பும்தான் இவை எல்லாவற்றுக்கும் காரணம்!

மனசாட்சியே கிடையாதா?

‘உடல்நலக்குறைவால்தான் இறந்தனர்’ என்று காவல்துறைத் தரப்பு வாதத்தை அப்படியே ஒப்புவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்னொருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து, விஷயத்தை முடிக்கப் பார்த்தார். ஆனால், அது அத்தனை எளிதில் முடிவதாக இல்லை. இந்தியா முழுக்க சாமானியர்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை நேரடியாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கொந்தளிக்கிறார்கள். அமெரிக்க போலீஸாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட்டுக்காக அனைத்துத் தரப்பு மக்களும் கைகோத்துப் போராடியதற்கு இணையான ஒன்றாக இந்தக் கொந்தளிப்பு கனன்றுகொண்டிருக்கிறது.

‘காவல்துறையினர் 5 பேர் பணியிடை நீக்கம்’, ‘காவலர்கள் கூண்டோடு இடமாற்றம்’ என்பது போன்ற அரசின் நடவடிக்கைகளாலும் கொந்தளிப்பை அடக்க முடியவில்லை. ‘சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கிறோம்’ என்று அடுத்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளார் முதல்வர். ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒருபோதும் இத்தகைய பிரச்னைகளைச் சரி செய்யமுடியாது என்பதே உண்மை.

தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் வன்முறை என்று அடுத்தடுத்து நிகழும் காவல்துறையின் வன்முறை வெறியாட்டங்களைத் தமிழக அரசு மூடிமறைக்கப் பார்த்தால், அதற்கான தண்டனையை நிச்சயம் தேர்தலில் சந்திக்க நேரிடும்.