
தலையங்கம்
‘இந்தியர்களுக்கு இன்னும் சில வாரங்களில் கொரோனாத் தடுப்பூசி கிடைத்துவிடும்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரிட்டன் உலகின் முதல் நாடாக, பைசர் (Pfizer) நிறுவனத்தின் கொரோனாத் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. தடுப்பூசிப் பரிசோதனை முடிவுகளை ஆய்வுசெய்து, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இதேபோன்ற அனுமதியை இப்போது வழங்க உள்ளன.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் இதேபோன்ற அனுமதி விரைவில் வழங்கப்படும். அதன்பிறகு தடுப்பூசி நமக்குக் கிடைப்பதில் எந்தத் தடையும் இருக்காது. இந்தியச் சூழலுக்கு ஏற்ற தடுப்பூசிகளை மத்திய அரசு அடையாளம் கண்டு, அவற்றை வாங்குவதற்குப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்தச் சூழலில், மூன்று விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஒன்று, தடுப்பூசியை உள்ளடங்கிய கிராமங்கள் வரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி, அவற்றை மக்களுக்குச் செலுத்துவதற்குப் போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்களை அடையாளம் காண்பது.
இரண்டு, தேவை உள்ள அனைவருக்கும் கொரோனாத் தடுப்பூசியை இலவசமாகக் கிடைக்கச் செய்வது. இப்போதே சில நாடுகள், ‘அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி அளிக்கப்படும்' என அறிவித்துள்ளன. கொரோனாத் தடுப்பூசியை ஒருவருக்கு இரண்டு டோஸ் போட வேண்டியிருக்கும். பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியாவில்தான் உருவாக்கப்படுகிறது. இதைக் குறைந்த விலையில் அரசுக்குத் தர அந்த நிறுவனம் முன்வந்துள்ளது. அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம், ‘கொரோனாத் தடுப்பூசிக்குக் காப்புரிமை கோர மாட்டோம்' என அறிவித்துள்ளது. அதையும் ஜெனரிக் முறையில் குறைந்த செலவில் இந்திய நிறுவனங்கள் பெருமளவில் தயாரித்து அரசுக்கு அளிக்க முடியும். உலகிலேயே அதிக அளவில் தடுப்பூசியைத் தயாரித்து வழங்கும் வல்லமை நம் நாட்டுக்கு உள்ளது. எனவே, மற்ற நாடுகளைவிட நம் அரசால் மக்களுக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் தடுப்பூசியை அளிக்க முடியும்.

மூன்று, தொற்று நோய்களைவிட வேகமாகப் பரவுபவை வதந்திகள். சின்ன விஷயங்களைக்கூட சிலர் பெரிதுபடுத்துவார்கள். தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களை உண்மைபோலப் பரப்பிக் குளிர்காய நிறைய பேர் தயாராக இருப்பார்கள். இந்த நேரத்தில் அரசுடன் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் அச்சத்தைப் போக்கத் துணைபுரிய வேண்டும். இதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் முக்கிய தலைவர்கள் பலரும் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளே மக்களுக்கு நம்பிக்கை அளிக்க உதவும்.
எல்லோரும் அச்சத்தில் இருக்கும் ஒரு தேசத்தில் இந்தத் தடுப்பூசியை ஒரே மாதத்திலோ அல்லது சில மாதங்களிலோ அனைவருக்கும் போட்டுவிட முடியாது. முன்னுரிமை அடிப்படையில் கொரோனா களப் பணியாளர்களுக்கும், பாதிப்பு அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கும் முதலில் அளிக்கலாம். ஆனால், ஏழை-பணக்காரர் என்ற பேதமில்லாமல் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதுவே, கொரோனா நாள்களில் நம் மக்கள் செய்த தியாகங்களுக்கு அரசின் நன்றியாக இருக்கும்.