சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தேர்தல் ஆணையர்களின் தேர்வு சரியா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

`உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு' என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை பல நாடுகள் பார்த்து வியக்கின்றன. ‘உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழா' என்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுத்தேர்தல்கள் குறித்துப் பெருமிதப்படுகிறோம். தேர்தலில் எந்தக் கட்சி வென்றாலும், ‘ஜனநாயகம் வென்றது' என்று புகழ்மாலை சூட்டுகிறோம்.

இதற்குக் காரணம், நம் அரசியலமைப்புச் சட்டமானது தேர்தல் ஆணையத்தை சுயேச்சையானதாகவும் அதிகாரங்கள் கொண்டதாகவும் உருவாக்கி வைத்திருப்பதே! தேர்தல்களை நியாயமாகவும் நடுநிலையுடனும் நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்த பெருமை நம் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பலருக்கு இருக்கிறது.

இந்தத் தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட மூன்று ஆணையர்களையும் மத்திய அரசின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் நியமிக்கிறார். ‘இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அப்போதைய ஆளுங்கட்சி எதுவோ, அதன் விருப்புவெறுப்புகள் அடிப்படையில் நியமனம் நடைபெறலாம். தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்' என்று கோரிய நான்கு பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்துவருகிறது.

சி.பி.ஐ இயக்குநர், தலைமைத் தகவல் ஆணையர் போன்ற முக்கியமான பதவிகளுக்கு உரியவர்களை பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்கிறது. இதுபோலவே தேர்தல் ஆணையர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை. மத்திய அரசோ, ‘அரசியல் சட்ட வழிகாட்டுதலின்படியே நியமனம் நடைபெறுகிறது' என்று வாதிட்டுவருகிறது.

இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போதே, தேர்தல் ஆணையராக அருண் கோயல் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். மத்திய அரசுச் செயலாளராக இருந்த அவர், விருப்ப ஓய்வு கொடுத்து ஓய்வுபெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுப் பதவி ஏற்றுக்கொண்டார். ‘24 மணி நேரத்திற்குள் எப்படி இது நடந்தது? மின்னல் வேகத்தில் இவரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறீர்கள்?' என்று மத்திய அரசை நோக்கி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம்.

6 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரை தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்கலாம். சமீபகாலமாக யாருக்கும் நீண்ட பதவிக்காலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பத்தாண்டுக் காலத்தில் ஆறு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தார்கள் என்றால், பா.ஜ.க ஆட்சியில் கடந்த எட்டு ஆண்டுக்காலத்தில் எட்டுப் பேர் மாறிவிட்டார்கள். குறுகிய காலம் பதவியில் இருக்கும்போது அவர்களால் எந்த நடைமுறை மாற்றங்களையும் செய்ய முடியாது.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் செய்த அதிரடிகளைத் தடுக்க, மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்து, அவர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியது அப்போதைய காங்கிரஸ் அரசு. அன்று முதலே தேர்தல் ஆணையத்தைப் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாற்றும் முயற்சிகள் தொடர்கின்றன. தேர்தல்கள் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால், தேர்தல் ஆணையர்களின் தேர்வு சரியாக நடைபெற வேண்டும்.