சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

மக்கள் இயக்கமாகட்டும் ‘மஞ்சப்பை இயக்கம்!’

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

பிளாஸ்டிக் மனித குலத்தின் மாபெரும் அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியிருக்கும் சூழலில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்குவதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வடகிழக்குப் பருவமழையால் பெருநகரங்களெல்லாம் தீவுகளாக மாறித் தவித்துவருகின்றன. ஆங்காங்கே அணைகள்போல தண்ணீரை மறித்துக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் இதற்கு முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் நேரத்தில், தமிழக அரசு இந்த விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியிருப்பது பொருத்தமானது.

தமிழகத்தில் தினமும் குவியும் குப்பைகளில் சராசரியாக 10% பிளாஸ்டிக் கழிவுகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. சென்னையில் குப்பைகள் சேகரிக்கப்படும்போதே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்கும் நடைமுறை உள்ளது. நிஜத்தில் இது முழுமையான செயல்பாட்டில் இல்லை. இதைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஆனால் கிராமப்புறப்பகுதிகளிலும் இத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டும். வீடுகளிலேயே கழிவுகளை தரம் பிரித்து வாங்கி முறைப்படி மறுசுழற்சி செய்வது, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பது ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மஞ்சப்பை இயக்கம் குறித்த அரசாணையில், Extended Producers Responsibility எனப்படும் கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையே அவற்றைக் கையாள்வதற்குப் பொறுப்பாக்கும் அம்சம் இடம்பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது. உலகம் முழுவதுமே, கழிவுகளுக்கு உற்பத்தி நிறுவனத்தைப் பொறுப்பாக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இது வெறும் பேச்சாகவே இருக்கிறது. கழிவுகள் என்றாலே அதற்கு நுகர்வோர்தான் பொறுப்பு என்ற பார்வையே இருக்கிறது. தற்போது தமிழக அரசு இந்தப் பார்வையைச் சற்று மாற்றியிருக்கிறது.

தலையங்கம்
தலையங்கம்

பெருநகரங்களில் சேரும் பெருமளவு பிளாஸ்டிக் கழிவுகள் பெரு நிறுவனங்களின் பேக்கேஜிங் குப்பைகளாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் சொல்கின்றன. இதுகுறித்து ‘கார்பேஜ் ஆடிட்’ எனப்படும் கழிவு தணிக்கை செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டு அதனடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடரவேண்டும்.

2019-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கவும் விநியோகிக்கவும் தடைவிதித்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த அறிவிப்பு ஒருகட்டத்தில் முடங்கிப்போனது. வழக்கம்போல பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. எனவே, தமிழக அரசின் ‘மஞ்சப்பை இயக்கம்’ அறிவிப்பு என்ற அளவில் பாராட்டத்தக்கது என்றாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் முழுமனதுடன் வரவேற்க முடியும். அதற்குப் பொதுமக்களாகிய நம் பங்கும் முக்கியம்.

கடந்த சில பத்தாண்டுகளாக நாம் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருள்களுடன் வாழப்பழகிவிட்டோம். ‘கடைகளுக்கு மஞ்சப்பை கொண்டுவருவது இழிவானது; கேரிபேக்கில் பொருள்கள் வாங்குவதே நாகரிகமானது’ என்ற பார்வை உருவாகியிருக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தை மாற்றவேண்டிய முக்கியமான கடமை, சுற்றுச்சூழல் மீது கொண்ட அக்கறை கொண்ட அனைவருக்கும் உள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது நம் தலைமுறையைக் காப்பதற்கான ஒரு மகத்தான இயக்கம். மஞ்சப்பை இயக்கம் என்பது அனைவரும் பங்கேற்கும் மகத்தான மக்கள் இயக்கமாக மாறுவதே நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நல்லது.