சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டம்

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம்’ என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

டுங்குளிரையும் கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள் விவசாயிகள். 32 விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் இந்தப் போராட்டம், தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இவற்றை அவசரமாக நிறைவேற்றுவதில் மத்திய அரசு பிடிவாதம் காட்டியதும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் முறையான விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ‘மத்திய அரசு எங்களை அழைத்துப் பேச வேண்டும்’ என ஆங்காங்கே போராட்டம் நடத்திப்பார்த்தனர். மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், ‘டெல்லி சலோ’ எனக் கிளம்பியிருக்கின்றனர்.

விவசாயிகள் டெல்லி வருவதைத் தடுக்கவே பார்த்தது அரசு. ஏதோ எல்லை தாண்டி ஊடுருவும் தீவிரவாதிகளை எதிர்கொள்வதுபோல சாலைகளைக் குறுக்கே வெட்டித் தடை ஏற்படுத்தினர். முள்கம்பித் தடுப்புவேலிகளை அமைத்தனர். போராடும் விவசாயிகளைத் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் எறிந்தும் கலைக்க முயன்றனர். எதற்கும் அசராமல் விவசாயிகள் டெல்லி சென்று சேர்ந்துள்ளனர்.

இந்தப் போராட்டம் நடைபெறும் நேரத்தில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன’’ என்கிறார். அது உண்மையென்றால், அவர்கள் ஏன் போராட வேண்டும்? ‘விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதையும், அரசு எப்போதும்போல கொள்முதல் செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்பதே விவசாயிகளின் கோரிக்கை. ‘குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்பதற்கு பிரதமரே உறுதிமொழி கொடுத்துவிட்டாரே… இதற்குமேல் என்ன உத்தரவாதம் வேண்டும்?’ என்று பா.ஜ.க தலைவர்கள் சிலர் கேட்கிறார்கள். பிரதமரே உறுதிமொழி கொடுத்திருக்கும் ஒரு விஷயத்தை சட்டமாக்கிக் கொடுப்பதில் அரசுக்கு ஏன் தயக்கம் இருக்கிறது? எத்தனையோ அவசர சட்டங்களை நிறைவேற்றிய அரசு இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டும்?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

‘2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம்’ என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், ‘வேளாண் சட்டங்களும், விரைவில் வரவிருக்கும் மின்சாரத் திருத்த மசோதாவும் தங்களைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிடும்’ என விவசாயிகள் மனதில் எழுந்திருக்கும் அச்சமே இந்தப் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணம். ஏற்கெனவே இதே டெல்லியில் விவசாயிகள் தீவிரமான போராட்டங்களை நடத்தியதும் கடைசிவரை பிரதமர் விவசாயிகளைப் பார்க்க மறுத்ததும் நினைவுக்கு வருகிறது. இந்தமுறை விவசாயிகள் அமைதியாகத் தங்கள் போராட்டத்தை நடத்துவதற்கு உரிய இடம் ஒதுக்கப்படாததும் விவசாயிகள் மோசமாக நடத்தப்படுவதும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.

உலகத்துக்கே உணவளிக்கும் விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. விவசாயிகளின் போராட்ட உணர்வை மதித்து அவர்களைக் கண்ணியத்துடன் மத்திய அரசு நடத்தவேண்டும். ஆயிரக்கணக்கில் திரண்டாலும் விவசாயிகள் கட்டுப்பாட்டுடன் அறப்போராட்டத்தை நடத்துகின்றனர். இதே கட்டுப்பாட்டு உணர்வுடன் மத்திய அரசும் விவசாயிகள் பிரச்னைகளை அணுகி, தீர்வுகளை உருவாக்கவேண்டும்.