
தலையங்கம்
‘ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த உதவித்தொகையை மத்திய அரசு இந்தக் கல்வியாண்டு முதல் திடீரென்று ரத்து செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் பலவும் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. ‘அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதுதானே எதிர்க்கட்சிகளின் வேலை’ என்ற நினைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ‘மத்திய அரசின் இந்த முடிவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்பது பெரும்பாலான கல்வியாளர்களின் கவலை.
‘மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியின விவகார அமைச்சகம் சார்பிலும், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் சார்பிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை இனிமேல் வழங்கப்படமாட்டாது. 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று மத்திய அரசு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை, லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக்கனவைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
`இத்திட்டம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும். குழந்தைகளின் பள்ளிக்கல்விக்கான நிதிச்சுமையை அவர்களிடமிருந்து குறைக்கும். ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யவும் பேருதவியாக இருக்கும். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதுடன், போட்டிகள் மிகுந்த வேலைவாய்ப்புச் சந்தையில் சமதள ஆடுகளத்தை உறுதி செய்யும்' என இந்தத் திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்துச் சொல்கிறது மத்திய அரசு. இப்படிப்பட்ட திட்டத்தை ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுருக்குவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
`கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுகிறார்கள். அதனால், இந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை தேவையில்லை' என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தது ஏற்புடையதல்ல. கல்வியை அடிப்படை உரிமையாக்கினால் மட்டும் போதாது. அந்த அடிப்படை உரிமையை அடைய, அவர்கள் பள்ளிக்கு வரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அரசு அவர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
உதாரணமாக, அரசுப் பள்ளிகளில் மட்டுமே இலவச உணவுத்திட்டம் செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகள் போன்ற மற்றவற்றில் இது இல்லை. அதுமட்டுமல்ல, போக்குவரத்துச் செலவு, எழுதுபொருள்கள், நோட்டு புத்தகங்கள் என்று பெற்றோர்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தங்கள் சக்திக்கு மீறிச் செலவழிக்க வேண்டியுள்ளது. எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதற்கான ஆதாரமாக இந்த உதவித்தொகை இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்தும் வறுமை நிலையிலிருந்தும் மீட்டெடுக்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. இத்திட்டம் நிறுத்தப்படுவதால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவதுடன் இடைநிற்றலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய அரசின் பங்கு 75%, மாநில அரசின் பங்கு 25% ஆக இருக்கும் இந்த உதவித்தொகையைச் செலவாகப் பார்க்காமல், எதிர்கால சந்ததியினரின், நாட்டின் மனிதவள முன்னேற்றத்துக்கான மூலதனமாக அரசு பார்க்க வேண்டும்.