
தலையங்கம்
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதை நாடு இப்போது பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
‘‘நீதிபதிகளைத் தேர்வு செய்ய இப்போது பின்பற்றப்படும் கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. நீங்கள் அனுப்பும் பெயர்களுக்கு எல்லாம் அப்படியே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நாங்கள் காலம் தாழ்த்துகிறோம் என்று குற்றம் சுமத்தாதீர்கள். அப்படி நினைத்தால் அரசுக்கு எதையும் அனுப்பாமல் நீங்களே நீதிபதிகளை நியமித்து, நீதிமன்றங்களை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்'' என்று உச்ச நீதிமன்றத்தைக் குறிப்பிட்டு ஒரு பேட்டியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு காட்டமாகப் பேசியது நீதித்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
‘‘நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால், நாங்கள் முடிவு எடுத்துவிடுவோம்'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நோக்கி எச்சரிக்கை விடுத்த காட்சியையும் நாடு அதிர்ச்சி அகலாமல் பார்த்தது.
இன்னொரு பக்கம் புதிதாகப் பதவியேற்றிருக்கும் குடியரசுத் துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் நாடாளுமன்ற மேலவையில் தான் ஆற்றிய முதல் உரையிலேயே, ``நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கான தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கு நாடாளுமன்றம் இயற்றிய சட்ட முன்வடிவை உச்ச நீதிமன்றம் புறக்கணித்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முடிவு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தின் இறையாண்மையைக் காத்திட நாம் எதுவும் செய்யவில்லை'' என்று தன் பங்கிற்கு இந்தப் பிரச்னையை ஊதிவிட்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் என்ற அமைப்பு எடுக்கும் முடிவுகள் குறித்த சர்ச்சைகள் புதிதல்ல. ‘‘இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பல நேரங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் நீதிபதிகளாக வருவதே இதற்கு சாட்சி...'' என்று ஆட்சியாளர்கள் இந்த முறையை எதிர்க்கிறார்கள். இந்த நியமன முறையை மாற்றுவதற்காக தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அடுத்த ஆண்டே அந்த ஆணையத்தை ரத்து செய்துவிட்டது. ‘நீதிபதிகளை நியமனம் செய்வது கொலீஜியத்தின் உரிமை. அதில் ஆட்சியாளர்களின் பங்கு இருப்பது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு நல்லதல்ல' என்பது நீதித்துறையின் வாதம். அப்போது முதலே இந்த முட்டல் மோதல் தொடர்கிறது.
கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் நியமனத்தை நீண்ட காலம் அரசு இழுத்தடிக்கிறது. கொலீஜியம் பரிந்துரைக்கும் எல்லாப் பெயர்களுக்கும் ஒப்புதல் கொடுப்பதில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் காலியிடங்கள் அதிகரித்துள்ளன. இது நீதி வழங்கலில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.
நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். அதேநேரத்தில் நீதித்துறையின் சுதந்திரத்தன்மையும் காக்கப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான மோதலில், எளிய மனிதர்களுக்கு நீதி கிடைப்பது தாமதமாகிவிடக் கூடாது.