Published:Updated:

ஒற்றைக்குரலாக ஒலிக்க வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

எல்லையில் தொல்லையில்லாமல் அமைதியாக வாழ நாம் விரும்பினால், சீனா விடுவதாக இல்லை. தொடர்ந்து அது நம்மைச் சீண்டிக்கொண்டே இருக்கிறது. அதன் சமீபத்திய சீண்டல் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் யாங்ட்சே என்ற மலைப்பகுதியில் நிகழ்ந்தேறியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி யாங்ட்சே பகுதிக்குள் நுழைய முயன்ற சீனப் படையினரை நம் வீரர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டபோது ஏற்பட்ட மோதல், மீண்டும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லடாக் பிரதேசத்தின் கல்வான் பகுதியில் இதேபோல எல்லைக் கோட்டைத் தாண்டி நம் பகுதிக்குள் நுழைந்த சீனப்படையினரோடு மோதல் மூண்டது. நாம் 20 வீரர்களைப் பறிகொடுத்தோம். சீனா அதைவிட இரண்டு மடங்குக்கும் மேற்பட்ட சேதத்தைச் சந்தித்தது.

நமக்கும் சீனாவுக்குமான எல்லை என்பது 3,488 கி.மீ நீளம் கொண்டது. இந்த எல்லைப் பகுதி, உயர்ந்த பனிமலைகளாலும், சீறி வரும் காட்டாறுகளாலும், கிடுகிடுக்க வைக்கும் பள்ளத்தாக்குகளாலும் ஆனது. இந்த எல்லைக் கோட்டை ஒட்டியிருக்கும் தன் பகுதியில் சீனா பல நூறு கி.மீ நீளத்துக்குச் சாலைகளை நிர்மாணித்துக்கொண்டிருப்பதால், அவர்களின் படைகளும் போர்த் தளவாடங்களும் சுலபமாகச் செல்ல முடியும். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் 1,748 கி.மீ நீளத்துக்குச் சாலைகள் அமைக்க நம் அரசு திட்டம் தீட்டிவருகிறது.

முன்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வந்து இந்தியப் பிரதமர் மோடியுடன் நட்புக்கரம் நீட்டிய அதேநேரத்தில் எல்லையில் ஊடுருவல் நிகழ்ந்தது. கல்வான் மோதல் நம் கண்களைத் திறந்தது. சீனாவின் இந்தப் போக்கு ஒன்றும் புதிதல்ல. நேரு காலத்திலும் இப்படித்தான் ஒருபுறம் நட்புறவு காட்டுவதுபோல நடித்துக் கைகுலுக்கிக்கொண்டே, இன்னொரு பக்கம் எல்லையில் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது. அதன் விளைவாக இந்திய-சீனப் போர் மூண்டது. சீனாவின் நிஜ முகத்தை இப்போது உணர்ந்து இந்தியா தன் எல்லைக் கட்டுமானங்களை வலுப்படுத்திவருகிறது.

இந்த நிலையில், ‘எல்லையில் உண்மையில் என்னதான் நடந்தது என்பதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்திருப்பது மக்களின் சந்தேகங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். ‘எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினரை விரட்டியடித்த நம் வீரர்களின் தைரியத்தையும் வீரத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது. சீன ராணுவம் திரும்பிச் சென்றுவிட்டது' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடுத்த சுருக்கமான பதில், மேலும் பல கேள்விகளை எழுப்பியதே தவிர சந்தேகங்கள் எதையும் களையவில்லை.

சீன எல்லையில் நடந்த விஷயங்களில் ராணுவ ரகசியங்கள் அடங்கியிருந்தால், அதை நாடாளுமன்றத்தில் வெளியிடாமல் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைத் தனியாக அழைத்து ‘என்ன நடந்தது, இதில் நம் நாட்டின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும்' என்று அரசு பகிர்ந்துகொள்வதுதான் சரியாக இருக்கும்.

தேசப் பாதுகாப்பு தொடர்பான இதுபோன்ற விஷயங்களில் அரசின் குரலோடு எதிர்க்கட்சிகளின் குரலும் சேர்ந்து ஒற்றைக்குரலாக ஒலிக்க வேண்டும். அதற்கு அரசும் வெளிப்படையாக இருக்க வேண்டும். கேள்வி கேட்பவர்களுக்கு ‘தேசத்துரோகிகள்' என்று பட்டம் சுமத்துவது சரியல்ல.