
இந்தியாவில் தயாராகும் உணவுப்பொருள்களில் 40 சதவிகிதம் வீணாவதாக ஐ.நா சபையின் வளர்ச்சிப்பணித் திட்டக்குழு கவலை தெரிவித்திருக்கிறது.
திருமணம், வரவேற்பு, அரசியல் நிகழ்ச்சிகள், பொதுவான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நாம் கலந்துகொள்கிறோம். அங்கெல்லாம் நடக்கும் விருந்துகளில் நாம் அனைவருமே இதை நிச்சயம் கவனித்திருப்போம். ஏராளமான உணவு வகைகள் முன்கூட்டியே பரிமாறப்பட்டு விருந்தினருக்காகக் காத்துக்கிடக்கும். ஒருவழியாக இடம்பிடித்து அமருபவர்கள் அத்தனை உணவுகளையும் அள்ளிக்கொள்வதில்லை. பெரும்பாலான இலைகளிலும் நிச்சயம் மிச்சம் மீதி குவிந்தே இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கென்று விடப்படும் இலைகளும், ஆளின்றி காற்றாடிக்கொண்டிருக்கும் இலைகளும் மொத்தமாகச் சுருட்டியெடுக்கப்பட்டு, குப்பைக் கூடைக்குத்தான் போகும்.
விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றது தமிழ்ச் சமூகம் என்பதில் மகிழ்ச்சிதான். ஆனால், இன்று விசேஷங்களின்போது உணவுக்கூடத்தில் விருந்தினரை வரவேற்று குடும்பத்தினரே உணவு பரிமாறும் வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. சிறுகச் சமைத்து, குறுக்கிப் பரிமாறி, உணவு வீணாவதைத் தடுப்பார் யாருமில்லை. சுயபெருமையைக் காட்ட உணவு வகைகளின் எண்ணிக்கையையும் அளவையும் கூட்டிக்காட்டும் ‘கெத்து’ இன்று பலரிடம் தெரிகிறது. சகலமும் கான்ட்ராக்ட்மயமாகிவிட்ட திருமண விருந்துகளில் வந்தாரை கவனிப்பாருமில்லை; உண்போரை விசாரிப்போருமில்லை.
ஒவ்வொரு பருக்கைச் சோறும் எவ்வளவு விவசாயிகளின் வியர்வையில் விளைகிறது என்பதை அறியாத சமூகம் அல்லவே நாம். அப்படியென்றால் இப்படி உணவை அசட்டையாகக் கையாண்டு வீணாக்குவது நியாயமில்லைதானே? ஆண்டொன்றுக்கு இந்தியாவில் வீணாக்கப்படும் உணவின் மதிப்பு 92,000 கோடி ரூபாய். இதைக்கொண்டு பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் ஓர் ஆண்டுக்கு உணவளிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு சொல்கிறது.
இந்தியாவில் தயாராகும் உணவுப்பொருள்களில் 40 சதவிகிதம் வீணாவதாக ஐ.நா சபையின் வளர்ச்சிப்பணித் திட்டக்குழு கவலை தெரிவித்திருக்கிறது. இதே நாட்டில்தான் கோடிக்கணக்கான மக்கள் போதிய உணவின்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு தவிக்கின்றனர். இவ்வளவு உணவு எப்படி வீணாகிறது என்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம். நம் ஆடம்பரத்தைக் காட்ட உணவை வீணாக்கப் போகிறோமா அல்லது நம் வீட்டு விசேஷங்களில் தேவைக்கேற்ப சமைத்து, நாமே உடன் நின்று தேவைக்கேற்ப பரிமாறி விருந்தோம்பலுக்குச் சிறப்பு சேர்க்கப் போகிறோமா?
`மிஞ்சும் உணவைத்தான் ஆதரவற்றோர் இல்லங்களுக்குத் தந்துவிடப் போகிறோமே’ என்று நம்மில் பலர் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், வீணாக்கும் உணவைக் கொட்டும் குப்பைத்தொட்டிகளாகத் தொண்டு இல்லங்களைப் பார்ப்பது தவறுதானே? அவர்களுக்கென்று பிரத்யேகமாக உணவு தயாரித்து, அவர்களுடன் சேர்ந்து உணவருந்தும் மகிழ்ச்சிதானே உண்மையில் ‘கொடுத்து மகிழ்வது’?
உணவு வீணாவதைத் தடுப்போம்... விருந்துகளை இனிமையாக்குவோம்!
