
தலையங்கம்
`தேவையில்லாமல் வழக்கை இழுத்தடிக்க வாய்தா கேட்கும் நபர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கவேண்டும்' என்று கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கும் கருத்து, நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் காத்திருக்கும் பல அப்பாவி மக்களுக்குச் சிறிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. ‘மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி தங்களுக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்தால், அத்தகைய நபர்கள் வழக்கை இழுத்தடிக்க வாய்தா மேல் வாய்தா கேட்டு இழுத்தடிப்பதைப் பார்க்க முடிகிறது. சட்டத்துக்கு விரோதமான தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள விரும்பும் இதுபோன்ற நபர்கள் வழக்கை இழுத்தடிக்க பலவேறு தந்திரங்களை மேற்கொள்கிறார்கள். இதையெல்லாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் உயர் நீதிமன்றம் அழுத்தமாகக் கூறியிருக்கிறது.
‘பிரிக்க முடியாதது, நீதிமன்றமும் தாமதமும்' என்று திருவிளையாடல் வசனத்தை மாற்றிக் குறிப்பிட வேண்டிய அளவுக்கு நம் நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பழைய வழக்கு, கடந்த வாரம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. பெர்ஹாம்பூர் வங்கி திவாலானது தொடர்பான இந்த வழக்கு கடந்த 1951-ம் ஆண்டு போடப்பட்டது. 72 ஆண்டுகள் கழித்து இதை முடித்து வைத்த நீதிபதி, இந்த வழக்கு போடப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். 1952-ம் ஆண்டு போடப்பட்ட ஐந்து வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. அவைதான் இப்போது இந்தியாவின் பழைய வழக்குகள். நம் நீதிபரிபாலன முறை என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சியங்கள்.
நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு நீதிமன்றங்களிலும் 4.32 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 1,15,000 வழக்குகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்றன. நிலுவையில் இருப்பவற்றில் கிரிமினல் வழக்குகளே அதிகம் என்பதால், விசாரணைக் கைதிகளாகவே சிறைச்சாலைகளில் வாடுவோர் எண்ணிக்கை மட்டும் நான்கு லட்சத்துக்கும் மேல்!
‘உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு?' என்று மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் நடக்கும் போட்டா போட்டியால் நாடு முழுதும் பல நீதிபதி பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. கிட்டத்தட்ட உச்ச நீதிமன்றத்துடன் யுத்தம் செய்துகொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் தீய நோக்கம் கொண்ட வழக்காடிகள் பலர் வாய்தா கேட்டு நீதிமன்றத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்கிறார்கள். உலகிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாக மாறிவருகிறோம். ஆனால், அதற்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையோ உயரவில்லை. வருடக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு தேவையில்லாத வாய்தாக்களைப் போலவே இவையும் ஒரு முக்கிய காரணம்.
எளிய மனிதர்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் இருக்கின்றன. நீதிமன்றங்கள்மீதான நம்பிக்கையைத் தகர்க்கும்விதமாக அரசும் நடக்கக்கூடாது; வழக்காடிகளும் நடக்கக்கூடாது. நீதிமன்றத்தை அவமதிப்பதாகப் பலர்மீது வழக்கு போட்டு விசாரணைக் கூண்டில் ஏற்றுகிறார்கள். ஆனால், வழக்குகளை இழுத்தடித்துத் தாமதம் செய்வது, நீதியை அவமதிப்பது போன்றதுதான்.