
தலையங்கம்
பல அடுக்குகளைக் கொண்ட மக்களாட்சி முறைதான் நம் நாட்டின் மாபெரும் பலம். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும், நாடு மற்றும் மாநிலம் தழுவிய அளவில், திட்டங்கள், சட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. இன்னொரு பக்கம் நம் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால்கள் போன்றவற்றைச் செய்துதருவது உள்ளாட்சி அமைப்புகள்தான். தெருவில் கொசுத்தொல்லை என்றாலும் சரி, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவேண்டும் என்றாலும் சரி... உடனடி உதவிக்கு வரவேண்டியவை உள்ளாட்சி அமைப்புகள்தான். இந்த உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் ஆதார வேர்கள்.
அரசியல் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் இப்போது நடைபெறவிருக்கிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நடக்க இருக்கும் இந்தத் தேர்தலில் 12,838 மக்கள் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம்.
கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை நோக்கிச் சென்ற நேரத்தில் நாம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டோம். இப்போது கொரோனா மூன்றாம் அலை தணிந்துவரும் சூழலில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நோய்த்தொற்று பரவுவதற்குத் தேர்தல் நடைமுறைகள் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக கவனத்துடன் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
பேரணிகள், ஊர்வலங்கள், மாநாடுகள், பிரமாண்ட கூட்டங்கள் எனப் பெருமளவில் மக்களைக் கூட்டும் பிரசார முறைகள் எதுவும் இல்லாமல் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றுக்கு மாற்றாக செல்போன் அழைப்புகள், சமூக ஊடகங்கள், உள்ளூர்த் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுகப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. இது ஒருவகையில் நல்ல மாற்றமே! எதிர்காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் தேர்தல்களை நடத்துவதற்கு இந்த அனுபவம் உதவும்.
எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் களத்தில் பலமுனைப் போட்டியும் நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களைப் போலவே, சுயேச்சைகளும் அதிகமாகப் போட்டியிடுகிறார்கள். வேறு எந்தத் தேர்தலைவிடவும் இப்போது வேட்பாளர்கள் அடிக்கடி மக்களின் வீடு தேடி வந்து பணிவுடன் வாக்கு கேட்பார்கள். மக்களைக் குழப்பும் பிரசாரங்களும் அதிகம் நடைபெறும். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சியும் நடக்கக்கூடும்.
வாக்காளர்களை மலிவாக எடைபோடும் வேட்பாளர்களையும், குற்றப் பின்னணி கொண்டவர்களையும் அடையாளம் கண்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். சாதி, மதம் போன்ற எல்லைகளைக் கடந்து, தங்கள் சிரமங்களையும் தேவைகளையும் நன்கு அறிந்த, பொதுநலனில் அக்கறை மிகுந்த வேட்பாளர்களையே மக்கள் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
`இது சாதாரண தேர்தல்தானே’ என்று சாக்குப்போக்கு சொல்லாமல், கொரோனா மீது பழியைப் போடாமல், இந்தத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், `அது சரியில்லை, இது சரியில்லை’ என்று அதன்பிறகு புலம்புவதில் அர்த்தமில்லாமல் போய்விடும்.