
தலையங்கம்
புதிய ஆண்டின் வாயிற்படியில் காத்திருக்கும் இந்தத் தருணத்தில், நம்மைக் கடந்து செல்லும் வருடத்தின் கணக்குவழக்குகள்மீது கண்கள் தாமாகவே போகின்றன. கொரோனா இடறியதால் தடுமாறிய நாம் 2022-ம் ஆண்டில் சுதாரித்து எழுந்தது மட்டுமல்ல, கொரோனாவுக்கு முன்பு என்ன வேகத்தில் சென்று கொண்டிருந்தோமோ, அதைவிடக் கூடுதலான வேகத்தில் செல்ல ஆரம்பித்து விட்டோம் என்பதைப் பல பொருளாதாரக் குறியீடுகள் காட்டுகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மட்டும் பழைய நிலையை எட்டுவதற்கான பொருளாதார ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றன.
இத்தனைக்கும் உலகத்தின் ஓட்டத்தையே இழுத்துப் பிடிக்கும் அளவுக்கு ரஷ்யா - உக்ரைன் போர் இந்த ஆண்டுதான் ஆரம்பித்தது. முடிவே தெரியாமல் நீளும் இந்தப் போரால் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்றம் கண்டதால், அந்த நாடுகளிலெல்லாம் விலைவாசி பல மடங்கு எகிறியது. இன்னொரு பக்கம் அமெரிக்கா பொருளாதாரத் தேக்க நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அங்கேயும் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பாதிப்பு என்றால், அது உலகம் முழுக்க எதிரொலிக்கும் என்பார்கள். ஆனால், நம் பொருளாதார அடிப்படைகள் வலிமையாக இருப்பதால் நம் மொத்த உற்பத்திக் குறியீட்டின் வளர்ச்சி விகிதம் இந்த நாடுகளைவிட மட்டுமல்ல, சீனாவைவிடவும் அதிகமாகவே இருக்கிறது. உலகின் எந்த நாட்டைவிடவும், உழைக்கும் திறன் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கையில் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்பதால் இளைஞர் சக்தி நமக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.
பணவீக்கத்தை மட்டுமல்ல, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் வளர்ச்சியடைந்த நாடுகளைவிட நாம் நன்றாகவே செயலாற்றியிருக்கிறோம். உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தபோது, தன்னைச் சுற்றிப் பெரும் இரும்புச்சுவரை எழுப்பித் தற்காத்துக்கொண்ட சீனாவை புதிய வகை கொரோனா இப்போது புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. இது உலகம் முழுக்கக் கவலையை ஏற்படுத்தினாலும், `இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு இருக்காது' என்றே நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்த BF.7 உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த ஜூலை மாதமே இந்தியாவில் கண்டறியப்பட்டது. அது தீவிர பாதிப்பையோ, அதிகம் பேருக்குத் தொற்றையோ அந்த நேரத்தில் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி பரவலாகப் போடப்பட்டு கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்பு சக்தி நமக்கு இருக்கிறது என்றாலும், விழிப்புடன் இதை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை மறக்கக்கூடாது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், ஜவுளித்தொழில் சவாலான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருந்தாலும், இன்னொரு புறம் மென்பொருள் துறையைத் தாண்டி மின்சார வாகனங்கள் மற்றும் செல்போன் உற்பத்திக்கான கேந்திரமாக உருவெடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. பருவமழை நன்கு பெய்ததால், நிச்சயம் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பிறக்கப்போகும் புதுவருடம் ஒளிமயமாகக் காட்சியளிக்கிறது. நாம் அடையப்போகும் வளர்ச்சியும் அதனால் கிடைக்கப்போகும் பலன்களும் எல்லாத் தரப்பு மக்களையும் சென்று சேர வேண்டும்.