
தலையங்கம்
கடல் அலைகளைப் போல அடுத்தடுத்து வந்த பல சவால்களை சாதுர்யத்துடன் சமாளித்த வெற்றிக்களிப்புடன் 2022-ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறோம். அலை என்றால் கடல் நினைவிற்கு வந்த நிலை மாறி, அந்த அழகான வார்த்தைக்கே வேறு அர்த்தம் கொடுத்துவிட்டது கொரோனா. முதல் அலையைவிட 2021-ம் ஆண்டில் எதிர்கொண்ட இரண்டாம் அலைதான் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருந்தது. கடினமான அந்தத் தருணங்களை நீந்திக் கடந்துவிட்டோம். தீபாவளி போன்ற மக்கள் குழுமும் பல பண்டிகைகளை அதிக சேதாரமில்லாமல் கடந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கும்போது நமக்கே வியப்பாக இருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது தடுப்பூசி. 2021-ம் ஆண்டு பிறந்தபோது நமக்குத் தடுப்பூசி அறிமுகமானது. குழந்தைகளைத் தாண்டி பெரியவர்கள் யாரும் தடுப்பூசி போட்டுப் பழகியிருக்காத நாட்டில், இதை எப்படிச் செய்யப்போகிறோம் என்பது மலைப்பாகவே இருந்தது. தடுப்பூசிக்கு யார் செலவழிப்பது என்ற குழப்பம் குறுக்கே வந்தாலும், மாநில அரசுகளும் நீதிமன்றமும் அழுத்தம் கொடுத்து மத்திய அரசைப் பணியவைத்தன.
இப்போது நாட்டில் 140 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், சுமார் 85 சதவிகிதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டார்கள். 56 சதவிகிதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டுவிட்டார்கள். அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தில், ஒரே ஆண்டில் இதை சாதித்திருக்கிறோம் என்பது பெருமிதமான சாதனையே!

ஒமைக்ரான் உருமாறிய கொரோனாத் தொற்று உலகைக் கவலைப்பட வைத்திருக்கும் இந்த நேரத்தில், 15 முதல் 18 வயது வரை உள்ளோருக்குத் தடுப்பூசி போடும் பணியைப் புத்தாண்டில் தொடங்கவிருக்கிறோம். கூடவே, மருத்துவத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும், மருத்துவர்கள் பரிந்துரையுடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்படவிருக்கிறது. தடுப்பூசிகள் போதுமான அளவில் கிடைப்பது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இரண்டு புதிய தடுப்பூசிகளின் பரிசோதனையும் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. லேசான தொற்றுள்ள நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று நலம்பெறும் வகையில் மாத்திரைகளும் வந்துள்ளன. அவையும் விரைவில் இந்தியா வரக்கூடும் என்பது நல்ல செய்தி. தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை இந்தப் புத்தாண்டிலும் மறக்காமல் இருப்போம்.
இன்னொரு பக்கம், குழந்தைகள் மீண்டும் கல்விக்கூடங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். தொழில்துறை உற்பத்தியும் வர்த்தகமும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்து சுறுசுறுப்புப் பெற்றுள்ளன. பருவமழை நன்கு பெய்து விவசாயத்தையும் தழைக்கச் செய்திருக்கிறது. இந்த நல்ல செய்திகளுடன் புத்தாண்டை வரவேற்போம்.
விடைபெறும் ஆண்டு சவால்களையும், சந்தப்பங்களையும் கொடுத்தது என்றால், மலர்கின்ற ஆண்டோ பல வாய்ப்புகளை வழங்கவுள்ளது. வாய்ப்புகளை வசமாக்கிக்கொள்ள வாழ்த்துகள்.