தொடர்கள்
Published:Updated:

சந்தேகங்களைக் களையுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துகொண்டே வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான காரணம், புலம்பெயர்ந்து வாழும் வாக்காளர்களே! சொந்த ஊரை விட்டு அதே மாநிலத்திலோ, வேறு மாநிலத்திலோ புலம்பெயர்ந்து வாழும் மக்கள், பணத்தையும் நேரத்தையும் செலவழித்து சொந்த ஊர் சென்று வாக்களிக்க பல சமயங்களில் முடிவதில்லை.

இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கிறது. வளமான தென்னிந்திய மாநிலங்களைத் தேடி வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தினம் தினம் வருவோர் எண்ணிக்கை பெருகியபடி உள்ளது. இந்நிலையில், ‘எந்த ஒரு வாக்காளரும் தேர்தல் நடைமுறையில் விடுபடக்கூடாது' என்ற இலக்குடன் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதுபற்றி நேரடியாக செயல்முறை விளக்கம் கொடுக்க, 57 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்திருக்கிறது. ஒரே வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் 72 தொகுதிகளுக்கு வாக்களிக்க முடியும் என்பது இதன் சிறப்பு.

சொந்த மண்ணில் வாழமுடியவில்லை என்ற காரணத்தாலேயே வாக்களிக்க முடியாத மக்களுக்கு, எங்கிருந்தும் வாக்களிக்கும் உரிமையை இது அளிக்கும் என்பதால் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இந்த முயற்சியை வரவேற்கின்றன. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏராளமான சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன. நடைமுறையில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதே சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துவரும் நிலையில், இந்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எந்த அளவு நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்பது அவர்களின் கேள்வி.

தலையங்கம்
தலையங்கம்

புலம்பெயர்ந்தவர் என்பதற்கான வரையறை என்ன? யார் யாரையெல்லாம் இப்படி வாக்களிக்க அனுமதிப்பது? இடம்பெயர்ந்து வாழும் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பது தொடங்கி, குழப்பமோ சிக்கலோ இல்லாமல் பாமர கூலித்தொழிலாளர்களால் இதில் எந்த அளவுக்கு வாக்களிக்க முடியும்? ஓட்டுரிமை ரகசியம் எப்படிப் பாதுகாக்கப்படும்? இப்படி அடுக்கடுக்காகப் பல கேள்விகள் எழுவதாலோ என்னவோ, இதை ஆழ்ந்து பரிசீலித்த பின்பே முடிவுக்கு வர இயலும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்லியிருக்கின்றன.

ஒருவேளை ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்தால், பீகாரில் நடைபெறும் தேர்தலுக்காகத் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் ஒருவரின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, தேசியக் கட்சிகளுக்கு இங்கு பூத் ஏஜென்ட்கள் இருக்கக்கூடும். மாநிலக் கட்சிகளுக்கோ, சுயேச்சை வேட்பாளர்களுக்கோ இது சாத்தியமில்லை. இப்படிப் பல நடைமுறைச் சிக்கல்கள்.

வாக்குப்பதிவை அதிகரிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இதற்காக காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே எதிர்ப்பு தெரிவிக்காமல், அந்த நடைமுறையில் எழும் சந்தேகங்களுக்கு கட்சிகள் விளக்கம் கேட்டு தெளிவு பெறலாம். சந்தேகங்கள் இல்லாத நடைமுறையாக அதை மாற்றலாம். எல்லோரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்தைப் போலவே கட்சிகளுக்கும் உண்டு. அரசியல் கட்சிகளின் சந்தேகங்களைக் களைந்து இதுபோன்ற விஷயங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.