கட்டுரைகள்
Published:Updated:

விமான அவமானம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த வயதான பெண் பயணி ஒருவர்மீது, குடிபோதையில் இருந்த சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவம் தொடர்பாக இப்போது வெளியாகும் தகவல்கள் மேலும் மேலும் அதிர்ச்சி அலைகளைப் பரவவிடுகின்றன.

சிறுநீர் கழித்த பயணியான சங்கர் மிஸ்ரா இப்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் ஏதோ ஒன்றும் தெரியாத தற்குறி அல்ல! அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் வெல்ஸ் பார்கோ என்ற நிதி நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் துணைத் தலைவராக வேலை பார்த்திருக்கிறார். சுமார் 20 ஆயிரம் பேர் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் பணிபுரிகின்றனர். அவ்வளவு பெரிய நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தவர், இந்தக் குற்றச் செயலைத் தொடர்ந்து அவரைப் பணிநீக்கம் செய்திருக்கிறது வெல்ஸ் பார்கோ நிறுவனம்.

அவர் விமானத்தில் ஏறியபோதே போதையில் இருந்ததாகவும். தன் இருக்கையில் அமர்ந்த பிறகும் நிறைய குடித்ததாகவும் சக பயணி ஒருவர் சொல்கிறார். போதையில் தள்ளாடிய அவருக்கு மது வழங்க வேண்டாம் என்று அருகிலிருந்த பயணி கேட்டுக்கொண்ட பிறகும், அவருக்கு மது வழங்கியுள்ளனர் விமான ஊழியர்கள். கடும் போதையின் தள்ளாட்டத்தில், தனக்கு முன்வரிசையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி மீது சிறுநீர் கழித்திருக்கிறார் அவர்.

விமானத்தில் தனியாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய அந்தப் பெண்மணியின் பாதுகாப்பை விமான நிறுவனமே உறுதிசெய்திருக்க வேண்டும். ஆனால், டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் அதைச் செய்யவில்லை. அந்தப் பெண்மணியின் பொருள்கள் அனைத்தும் சிறுநீரில் நனைந்து மோசமாக ஆன பிறகும், மாற்று உடையுடன் திரும்பவும் வந்து அங்கேயே உட்காரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் மறுத்தபோது வேண்டா வெறுப்பாக, பணியாளர் இருக்கையில் உட்காரவைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் பிசினஸ் கிளாஸில் வந்த பயணி அவர்.

அந்தப் பெண்மணி புகார் தர முயன்றபோது முறைப்படி அதைப் பதிவும் செய்யவில்லை. போதை லேசாகத் தெளிந்து சங்கர் மிஸ்ரா விபரீதத்தை உணர்ந்து பணியாளர்களிடம் பேசியபோது, அவருக்கும் அந்தப் பெண்மணிக்கும் கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்துபோலப் பேசி சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார்கள். நடந்த எல்லாவற்றையும் மூடி மறைக்கவே பார்த்துள்ளனர். விமானப் போக்குவரத்துத்துறையிடம்கூட புகார் செய்யவில்லை. அந்தப் பெண்மணி ஏர் இந்தியாவுக்குக் கடிதம் எழுதி, அது மீடியாக்களில் வெளியான பிறகே இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, அரசியல் கட்சி ஒன்றின் பொறுப்பில் இருக்கும் சென்னை டாக்டர் ஒருவர் இப்படித்தான் பக்கத்து வீட்டு மூதாட்டியுடன் சண்டை வந்ததால், அவர் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தார். படிப்பும் பெரிய பொறுப்புகளும் கிடைத்த பிறகும், சக மனிதர்களைக் கழிவறையாக நினைக்கிறார்கள் என்றால், இவர்களைவிடக் கீழ்மையானவர்கள் யாருமில்லை.