
தலையங்கம்
தைத்திருநாள் கொண்டாட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எத்தனையோ கொண்டாட்டங்கள் வருடம் முழுக்க இருந்தாலும், இயற்கைக்கும் கால்நடைக்கும் நன்றி சொல்ல ஒரு கொண்டாட்டம் என்பது தமிழ் மரபின் தனிச்சிறப்பு. ஆடிப் பட்டம் தேடி விதைத்ததில் இருந்து தையில் அறுவடை செய்யும் காலம் வரை, தங்கள் உழவுக்குத் துணையாக இருந்த சூரியனுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் புத்தரிசி படைத்து அர்ப்பணிக்கும் நன்றியுணர்வையே ஒரு பண்டிகை ஆக்கியிருக்கும் நம் பாரம்பர்யம்... நமக்கு சொல்லும் முக்கியச் செய்தி ஒன்றும் இருக்கிறது.
இயற்கையே ஆதி. இயற்கையே ஆசி. இயற்கையே வரம். இயற்கையே வழிகாட்டி. அந்த இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் வரை மனிதன் இந்த பூமிப்பந்தில் தொடர் ஓட்டம் ஓடுவான். இயற்கையை சிதைத்து அதை முன்னேற்றம் என்று சொல்லி நகரும் மனித இனத்தின் கால்கள்,
ஒருகட்டத்தில் அதே இயற்கையால் கட்டப்படும். அதுகுறித்து நமக்கு இப்போது அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவிப்புச் செய்தி, எச்சரிக்கை மணிதான்... காலநிலை மாற்றங்கள். நாடுகள், அரசாங்கங்கள், தொழிற்சாலைகளின் இயற்கை பாதுகாப்புக் கடமைகள் ஒருபக்கம் இருக்க, ஒரு தனி மனிதனாக, நெகிழியைத் தவிர்ப்பதில் இருந்து அருகில் இருக்கும் நீர்த்தடங்களை, நீர்நிலைகளைப் பாதுகாப்பது வரை, பூமிக்கான நம் கடமையை, நன்றியை நாம் ஒவ்வொருவருமே செய்வோம் தோழிகளே.

போகி, பழையனவற்றைக் கழிக்கச் சொல்லிக்கொடுக்கும் பண்டிகை. பழையன கழிப்பதில் பாரம்பர்யத்தையும், பழைய பழக்க வழக்கங்களையும் நாம் பகுத்தறிந்து, பிரித்தறிய வேண்டியவை நிறைய உள்ளன. அடிப்படை அறிவியல் காரணங்களற்ற மற்றும் ஆணாதிக்க சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட வாழ்க்கைப் பழக்க வழக்கங்களை விட்டு வெளிவருவோம். அதே நேரம், உலகின் ஆதி நாகரிகம் தோன்றிய நம் மண்ணில், நீர் மேலாண்மை, கட்டடக் கலை உள்ளிட்ட அறிவியல் கூறுகளுடனும், மக்கள் ஒற்றுமையுடன் கூடி வாழ்தலுக்கான சமூக சிந்தனையுடனும் உருவாக்கப்பட்ட பழக்க வழக்கங்களே நம் பாரம்பர்யம் என்று உணர்ந்து, அவற்றைக் கடத்துவோம் நம் தலைமுறைகளுக்கும்.
பண்டிகைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குவது... உறவுகள், நண்பர்களின் கூடல். பொருள் தேடி வழி பிரியும் உலகம் இது. இந்தப் பொங்கலுக்கு சொந்த ஊர் நோக்கிப் பறக்கவிருக்கும் பெரும் கூட்டத்தை சுமந்து செல்லும் பேருந்துகளிலும் ரயில்களிலும் சக்கரங்களாகச் சுழலவிருப்பவை, சொந்த மண்ணைத் தேடி வரும் அந்தப் பறவைகளின் கூடடையும் மனங்கள். பொங்கலுக்கு ஊர் தேடிச் செல்பவர்களும், பொங்கலுக்கு ஊருக்கு வருபவர்களை வரவேற்பவர்களும் இணையும் நாள்களில் பெருகட்டும் சந்தோஷம். உறவுகள் கூடும்போது சிலரின் நடவடிக்கைகளால் சின்னச் சின்ன வருத்தங்கள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், அதைப் பின்னுக்குத் தள்ளி, மகிழ்வையே முன்னிறுத்திக் கொண்டாடுவோம் தோழிகளே இந்தத் தைத்திருநாளை.
எல்லாம் வல்ல இயற்கைக்கு சொல்வோம் நன்றி... பொங்கலோ பொங்கல்!
முக்கிய குறிப்பு: முகக்கவசம் அணிவோம்... சமூக இடைவெளி மறவோம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்