Published:Updated:

தை பிறக்கட்டும்! தமிழ் மலரட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கொரோனா நிகழ்த்திய தாக்கங்களில் இருந்து மீண்டு உற்சாகமும் உவகையும் பெருக்கெடுக்க, மலரப்போகிறது தை. எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தைத்திருநாளில் தமிழகத்தின் எல்லாப் பக்கங்களிலும் கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகள் களைகட்டுகின்றன.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியென்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, அறிவிற்சிறந்த, பண்பாட்டில் மேலோங்கிய ஒரு தலைமுறையை உருவாக்குவதும்தான். தமிழகமெங்கும் நடந்துவரும் புத்தகக் காட்சிகள் அதற்கான ஆகச்சிறந்த முன்னெடுப்பு. இதன் உச்சமாக சென்னைப் புத்தகக் காட்சியின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு பல்வேறு நாடுகளின் பதிப்பாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேசப் புத்தகக் காட்சியும் நடைபெறவிருக்கிறது. இது முக்கியமான நல்நிகழ்வு. சிறந்த தமிழ் நூல்கள் பலவும் உலக மொழிகளுக்குச் செல்லவும், உலகின் சிறந்த நூல்கள் தமிழுக்கு வரவும் இது வழிவகுக்கும்.

தொடர்ச்சியாக நடைபெறும் புத்தகக் காட்சிகள் நம் மக்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. புத்தகக் காட்சிக்குக் குடும்பம் குடும்பமாகக் குவிகிற மக்கள், கைநிறைய நூல்களோடு வெளியேறுகிறார்கள். இதுவரையில்லாத அளவுக்கு புத்தகக் காட்சி பெற்றிருக்கும் வரவேற்பு இந்தத் தைத்திங்களை இனிப்பாக்குகிறது. பாடநூல்களைத் தாண்டிய வாசிப்பினை குழந்தைப்பருவத்திலேயே குடும்பங்களில் அறிமுகம் செய்வது, நம் பிள்ளைகளுக்கு உலக அனுபவத்தைக் கொடுக்கும். இளம் தலைமுறையினர் தமிழ் நூல்களை வாசிக்கத் தொடங்குவது, நம் மொழிக்கும் நல்லது; அவர்களுக்கும் அது பக்குவம்மிக்க வாழ்க்கையைப் பரிசளிக்கிறது.

தலையங்கம்
தலையங்கம்

புத்தகக் காட்சிகளைப் போலவே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இலக்கிய விழாக்களையும் நடத்துகிறது தமிழக அரசு. பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொருநை இலக்கிய விழாவைத் தொடர்ந்து, சென்னை இலக்கியத் திருவிழா நடைபெற்றது. அடுத்து வைகை, காவிரி, சிறுவாணி இலக்கியத் திருவிழாக்களும் வரிசையில் நிற்கின்றன.

இன்னொரு பக்கம், தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள சூழலில், நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கமிக்கும் சங்கமம் விழாவுக்குச் சென்னை மாநகரத் தெருக்கள் தயாராகின்றன. கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தோற்பாவைக் கூத்து, தெருக்கூத்து போன்ற நம் கலை வடிவங்கள் எல்லாம் நம் கலைகளின் வேர்களை நமக்கு மறு அறிமுகம் செய்யவிருக்கின்றன.

புதுப்பொலிவோடு பிறந்திருக்கும் புத்தாண்டும், மலரவுள்ள தமிழர் திருநாளாம் தைத்திருநாளும் ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான, அறிவுபூர்வமான தொடக்கத்தைத் தந்துள்ளன. இந்தச் சூழல் தொடர்ந்து, வீடுகளில் இன்பம் பொங்கவும், நாட்டில் அமைதி தங்கவும் இயற்கை அருள்புரியட்டும்!