
தலையங்கம்
புத்தாண்டில் தொடங்கி, கொரோனாத் தொற்று வேகமாக அதிகரிப்பதைப் பார்த்துத் திகைத்து நிற்கிறோம். மீண்டும் ஒருமுறை கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. ‘கொரோனா மூன்றாம் அலையின் வீரியத்தை இப்போது நாம் சந்தித்துவருகிறோம்’ என்பதை நிபுணர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஒமைக்ரான் உருமாற்றம் உலகெங்கும் படுவேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு தொடங்கியிருக்கிறது. ‘தமிழகத்தில் மூன்றாவது அலை ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சம் தொட வாய்ப்புள்ளது. அதன்பின் படிப்படியாக பாதிப்பு குறையும்’ என்று இந்திய அறிவியல் நிறுவனமும், இந்திய புள்ளியியல் நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. ‘பிப்ரவரியின் முதல் இரு வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என்கிறது சென்னை ஐ.ஐ.டி நடத்திய ஆய்வு. ‘கடந்த இரு அலைகளைப் போல் மோசமான பாதிப்புகள் இப்போது இருக்காது’ என்றும் கணிக்கிறது அந்த ஆய்வு. கொரோனாவின் முந்தைய தாக்கங்களை சரியாகக் கணித்த கான்பூர் ஐ.ஐ.டி., ‘மூன்றாவது அலை பிப்ரவரி 3-ம் தேதிக்குள் உச்சத்தைத் தொடும்’ என்கிறது.
கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட இரண்டாவது அலையைவிட மூன்று மடங்கு வேகமாகவும், அதிகமாகவும் இம்முறை தொற்று பரவுகிறது. ‘‘2021 மே மாதத்தில் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது தமிழகத்தில் ஒருநாளில் சராசரியாக 36,000 பேர் பாதிக்கப்பட்டனர். இம்முறை அது மூன்று மடங்கு உயரலாம்’’ என்று எச்சரிக்கிறார், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன். ஒமைக்ரான் பரவல் மிக எளிதாக இருப்பதால், மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை பாதிப்பு அடையக்கூடும் என்றாலும், தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் ஒமைக்ரானால் ஒரு மாத காலத்துக்கு அதிகரித்த தொற்று, அதன்பின் உடனே குறைந்துவருவது நம்பிக்கை தருகிறது.
இப்படி நம்பிக்கையூட்டும் தகவல்கள் இன்னும் உள்ளன. கொரோனாத் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவிலும், ஆக்சிஜன் பிரிவிலும் படுக்கைகள் காலியாகவே இருக்கின்றன. ஒமைக்ரான் தொற்றிய பலருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதில்லை. இன்னமும் தடுப்பூசி போடாதவர்களும், வேறு மருத்துவப்பிரச்னை உள்ளவர்களும்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே, அச்சத்தில் மூழ்காமல் கவனமாக இந்த அலையை எதிர்கொள்ள வேண்டும். தொற்று ஏற்படாதபடி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தாமலே இந்த அலையைக் கடந்துவருகின்றன. ‘‘கொரோனா முதலில் தொற்றியபோது, அதுகுறித்து நமக்கு எதுவும் தெரியாது. தடுக்க வழிதெரியாமல்தான் ஊரடங்கு போட்டோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதுபற்றிய அறிவியல் உண்மைகளை நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம். தடுப்பூசிகள், மருந்துகள் வந்துவிட்டன. கொரோனாவைத் தடுப்பதற்குத் தேவையான அறிவு, வழிகள் நம்மிடம் உள்ளன. எனவே, முழு ஊரடங்கு தேவையில்லை’’ என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன்.
பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைச் செய்வதே மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் காக்கும் வழிமுறை. எனவே பொதுமுடக்கத்தைத் தவிர்த்து, சுயகட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவோம்!