
தலையங்கம்
பிழைப்புக்காக சென்னையில் வசிக்கும் பலருக்கும் வருடத்துக்கு ஒரு முறை சொந்த ஊர் சென்று உறவுகளுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதுதான் ஆகப் பெரிய மகிழ்ச்சி. ஆனால், பண்டிகை தினங்களின்போது ஊருக்குப் போவது சாகசங்கள் நிறைந்த மிகப்பெரிய போராட்டமாகவே மாறிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்ப மக்கள் படும் பாடு, அதைவிடக் கொடுமையானது.
பலருக்கும் பாதுகாப்பானது ரயில் பயணம் என்றாலும், அதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களேயே தீர்ந்துபோய்விடுகின்றன. இன்னொருபுறம், அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் வசதிக்குறைவாக இருக்கின்றன. அவை மெதுவாகவே செல்கின்றன. பண்டிகைக் காலச் சிறப்புப் பேருந்துகள் என்று சாதாரணப் பேருந்துகளையும் களமிறக்கிவிட்டாலும், அவற்றிலும் இடம் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில், முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட முடியாதவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே தேர்வு, ஆம்னி பேருந்துகள்தான்.
ஆனால், சாதாரண நாள்களைவிட வார இறுதி நாள்களில் அதிக கட்டணம், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களில் தாறுமாறாக உயரும் கட்டணம் என்று ஆம்னி பேருந்துகள் செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு அளவே இல்லை. குறிப்பாக பொங்கல் மற்றும் தீபாவளிக் காலங்களில் பல மடங்கு கட்டணம் உயர்கிறது. ஒரு பேருந்துக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு, நடுவழியில் இறக்கி வேறொரு பேருந்துக்கு மாற்றுவது, குறித்த நேரத்தில் பயணத்தை ஆரம்பித்து உரிய நேரத்துக்குள் ஊர் போய்ச் சேராதது என்று சர்ச்சைகளுக்கும் புகார்களுக்கும் குறைவில்லை.
ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுக்க சுமார் 25,000 பேர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது. பண்டிகை நேரங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கிறது. என்றாலும், ஆம்னி பேருந்து சேவை என்பது இன்னமும் முறைப்படுத்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது. ‘ஆம்னி பேருந்துகள் சுற்றுலாப் பேருந்துகள் போல ஒப்பந்த வாகன வகையைச் சேர்ந்தவை. அவற்றுக்கு குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிக் கட்டணம் வசூல் செய்ய அனுமதி கிடையாது. அதிக கட்டணம் வசூலித்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது’ என்பது போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் விளக்கம்.
‘எங்களுக்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்’ என்கிறார்கள் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள். கடந்த தீபாவளியின்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டண நிர்ணயம் செய்து இணையதளத்தில் வெளியிட்டார்கள். ‘இதைவிட அதிகமாக வசூல் செய்தால் புகார் தெரிவிக்கலாம்’ என்றும் அந்தச் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது. என்றாலும், புகார்கள் குறையவில்லை.
‘ஆம்னி பேருந்துகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்ய மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமில்லை’ என்று சொல்லித் தப்பித்துக்கொள்கிறது தமிழக அரசு. ‘அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்’, ‘கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை’ என்றெல்லாம் பண்டிகை நேரங்களில் சம்பிரதாய அறிவிப்புகள் செய்வதில் அர்த்தமில்லை. சொல்லைவிடச் செயலே தேவைப்படுகிறது. சட்டத்தைத் திருத்தியாவது ஆம்னி பேருந்து சேவையை முறைப்படுத்தி, அதற்கு நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்து, பல்லாயிரம் மக்களின் அவதியைத் தீர்க்க வேண்டும். ‘ஏழைகளுக்குப் பாதிப்பில்லை’ என்று காரணம் சொல்லக்கூடாது. எவருக்கு ஏற்படும் பாதிப்பையும் தீர்க்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.