சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பயிர்கள் சேதத்தின் துயர் துடையுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

‘காய்ந்து கெடுக்கும் அல்லது பெய்து கெடுக்கும்' என்று காவிரிப்படுகையில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதை நிரூபிப்பதைப்போல், மகிழ்ச்சியுடன் பொங்கலிட்டுக் கொண்டாட வேண்டிய மக்களைத் தண்ணீருக்குள் தத்தளிக்க வைத்திருக்கிறது கொட்டித் தீர்த்த பெருமழை.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் ஒரே வாரத்தில் பெய்த மழையால் காவிரிப்படுகையில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரில் முக்கால்வாசி வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். கடலை, உளுந்து, வாழை, எள் பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் புகுந்து பல வீடுகள் இடிந்துள்ளன. சில உயிர்களும் பறிபோயுள்ளன. ஏராளமான கால்நடைகள் இறந்துள்ளன. ஏற்கெனவே கஜா புயலால் சிதைந்த வாழ்வாதாரத்தை மீட்க இயலாமல் தவிக்கும் மக்களுக்கு இது மேலும் பேரிடி.

தென்மாவட்டங்களிலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. தென்காசி மாவட்டத்தில் மட்டும் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, மிளகாய், சின்ன வெங்காயம் போன்ற மானாவாரிப் பயிர்கள் பெருமளவு தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன.

பருவமழையே தமிழகத்தின் மிக முக்கிய நீராதாரம். ஆனால், சமீபகாலமாக காலநிலை தவறிப் பெய்யும் மழை பெருஞ்சேதத்தை விளைவிக்கிறது. ஏற்கெனவே பல பிரச்னைகளில் தவிக்கும் விவசாயிகளை இயற்கையும் தன் பங்குக்கு வஞ்சிக்கிறது. தட்பவெப்ப மாற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.

பயிர்கள் சேதத்தின் துயர் துடையுங்கள்!

தென்மாவட்ட அணைகளிலிருந்து அதிகமாக வெளியேற்றப்பட்ட நீருடன் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்ததால், தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது. ஆனால், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் 200 குளங்கள்கூட முழுமையாக நிரம்பவில்லை. பெரும்பாலான சிற்றணைகளின் ஆழம் குறைவாக இருப்பதால் போதிய அளவுக்குத் தண்ணீரைச் சேமித்து வைக்கமுடியவில்லை. சில இடங்களில் ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தப்பட்டாலும், பல பகுதிகளில் குடிமராமத்துத் திட்டம் பெயரளவுக்கே நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதை முறையாகச் செய்திருந்தால், பாதிப்புகளும் குறைந்திருக்கும்; நீரையும் சேமிக்க முடிந்திருக்கும். நீர்நிலைகள், வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். குடிமராமத்துத் திட்டத்தால் விளைந்த பயன் குறித்தும், செலவிடப்பட்ட தொகை குறித்தும் வெளிப்படையான தணிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

எல்லா இடர்களையும் கடந்து மீண்டும் மீண்டும் இயற்கையை நம்பி நிலத்தில் இறங்கும் விவசாயிகளின் துயர் போக்கப்பட வேண்டும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்கள் குறித்துக் கணக்கெடுத்து, காலதாமதமில்லாமல் உரிய இழப்பீட்டை வழங்கி விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும்.