சினிமா
தொடர்கள்
Published:Updated:

தண்டிப்பதற்கு ஏன் தாமதம் முதல்வரே?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

ஊழல், முறைகேடு வழக்குகளில் அரசியல்வாதிகள் சிக்குவதும் தண்டனைக்குள்ளாவதும் வழக்கமான நிகழ்வு. ஆனால் அந்த அரசியல்வாதியின் முடிவை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுச் செயல்படுத்தும் அதிகாரிகள்மீது பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் அந்தவகை அதிகாரிகள் உயர் பொறுப்புகளைப் பிடித்து, குற்ற உணர்வே இல்லாமல் பணியாற்றி ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். இந்த நிலை எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்துகொண்டே வருவது வருத்தமளிக்கிறது.

சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்காக விடப்பட்ட 811 கோடி ரூபாய் டெண்டர்களில் முறைகேடுகள் செய்து அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் உறவினர் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ், கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த விஜய கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாக இருந்த கந்தசாமி, மதுசூதன் ரெட்டி உட்பட 12 அதிகாரிகள் இந்த முறைகேடுகளுக்குத் துணைபோனதைக் கண்டறிந்தது. அவர்களையும் வழக்கில் சேர்க்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கடிதம் எழுதியிருந்தது. எட்டு மாதங்கள் கடந்தும் அரசுத் தரப்பிலிருந்து இதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. உயர் அதிகாரிகளே இவர்களுக்கு அரணாக இருந்து காப்பாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. ‘இந்த வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கடந்த நவம்பர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

லஞ்ச ஒழிப்புத்துறையின் கடிதத்துக்கு சட்டப்படி நான்கு மாதங்களுக்குள் அரசு பதிலளிக்க வேண்டும். எனினும், எட்டு மாதங்கள் கடந்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. யாரால் இந்தக் காலதாமதம் என்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டியது தமிழக முதல்வரின் கடமை.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் வாக்களித்து ஆட்சியை மாற்றுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார்கள். வந்த வேகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனையிடப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் எந்த முன்னேற்றமும் இல்லை. வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளில் பலர் பணிமாற்றம் பெற்று முக்கியத் துறைகளுக்குச் சென்றுள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலங்களில் சில அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டே பொதுமேடைகளில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அந்த அதிகாரிகளும்கூட தற்போதைய நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த முரண் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

அரசியல்வாதிகளுக்குப் பணிந்தோ அல்லது உடன்பட்டோ ஊழலுக்குத் துணைபோகிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு இருக்கிறது.