சினிமா
தொடர்கள்
Published:Updated:

பாரபட்சமான நீதி - அநீதியே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

நுபுர் சர்மா விவகாரம், அதிர்ச்சியான மற்றும் அதிபயங்கரமான பல விளைவுகளைச் சந்தித்துவருகிறது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்ட, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரைச் சேர்ந்த தையல்காரர் கன்னையா லால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் படுகொலை நாடு முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் இன்னொரு சம்பவமும் வெளியில் வந்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் மருந்துக்கடை நடத்திவரும் உமேஷ் கோலே என்பவர் சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இது கொள்ளை முயற்சியில் நடந்த கொலை என்று சொல்லப்பட்டது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகப் பதிவுகள் வெளியிட்டதால்தான் உமேஷ் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள் மேலும் அதிர்வலையை எழுப்புகின்றன.

கியான்வாபி மசூதி தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துகளுக்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சிவலிங்கத்தை அவமதித்து தஸ்லிம் அகமத் ரஹ்மானி என்பவர் பேசியதற்கு எதிர்வினையாகவே இதைச் செய்தேன் என நுபுர் சர்மா காரணம் சொல்கிறார். நுபுர் சர்மா மீதோ, அவரை அப்படிப் பேசத் தூண்டிய ரஹ்மானி மீதோ ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை பாயவில்லை என்றுதான் நமக்குப் புரியவில்லை.

நுபுர் சர்மா விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சைகளை உருவாக்கியநிலையில் தன்மீதான வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் போனார் நுபுர். நீதிபதிகள் சூர்யகண்ட், ஜே.பி.பார்திவாலா அடங்கிய அமர்வு, நுபுர் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, கடும் கண்டனத்தை முன்வைத்தது. “உதய்பூரில் கன்னையா லால் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சால்தான். ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்ற பொறுப்பு, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கான லைசென்ஸ் இல்லை’’ என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி சூர்யகண்ட் குறிப்பிட்ட இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. ‘`நீங்கள் யார் மீதாவது புகார் செய்தால், அந்த நபரை உடனே கைது செய்கிறார்கள். ஆனால் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்’’ என்றார் நீதிபதி.

`சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேர். எனினும், பா.ஜ.க-வில் இருப்பவர்களை ஒரு மாதிரியும், மற்றவர்களை வேறு மாதிரியும் அணுகுகிறது காவல் துறை. இதற்கு சமீபத்திய உதாரணம், நுபுர் சர்மாவின் சர்ச்சைக் கருத்தைச் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் கைது. நுபுர் சர்மாவைக் கைது செய்யாத டெல்லி காவல்துறை, 2018-ம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்காக அதேபோன்ற சட்டப்பிரிவுகள் கொண்ட வழக்கில் முகமது ஜுபைரைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்கு குறித்துப் பல சந்தேகங்கள் எழுப்பட்டாலும் ஜுபைர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நுபுர் சர்மாவின் கருத்து தனிப்பட்ட ஒன்று அல்ல! சமூக ஒழுங்கைக் குலைக்கும் விதமாகவும், இந்தியா போற்றும் மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும் விதமாகவும் அவருக்கு முன்பு பலர் பேசினார்கள். சிலர்மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தது. பலரின் கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. சமூக ஒழுங்கைக் குலைக்கும் விதமாக யார் பேசினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாரபட்சமான நீதி என்பது சாராம்சத்தில் அநீதியே!