சினிமா
Published:Updated:

இன்னொருமுறை ஏமாறக்கூடாது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

காவிரி மற்றும் தென்பெண்ணை நதிகளில் தமிழகத்துக்கு உள்ள உரிமை கர்நாடகத்தால் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. ‘வரலாறு திரும்பும்’ என்பார்கள். இந்த வஞ்சக வரலாறு இரண்டு நதிநீர் விஷயத்திலும் தமிழகத்துக்கு எதிராக மீண்டும் திரும்பியிருக்கிறது.

தென்பெண்ணையின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் கிராமத்தில் புதிதாக ஓர் அணையைக் கர்நாடக அரசு தன்னிச்சையாகக் கட்டியிருக்கிறது. ‘இங்கே அணை கட்டினால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயம், குடிநீர், வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படும்’ என்பதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. 2019 நவம்பர் 14 அன்று, ‘நடுவர் மன்றம் அமைத்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. நடுவர் மன்றம் அமைப்பதற்கு மாறாக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒரு குழுவை அமைத்துக் காலம் கடத்தியது. இடைப்பட்ட காலத்தில் கர்நாடக அரசு சந்தடியில்லாமல் அணை கட்டி முடித்துவிட்டது.

இன்னொரு பக்கம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு முனைப்பு காட்டுகிறது. இந்த அணையைக் கட்டுவதற்கு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோ, ‘மேக்கேதாட்டூ அணை கட்டுவதை எதிர்க்க வேண்டாம். பேச்சுவார்த்தை நடத்தலாம், வாருங்கள்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

தலையங்கம்
தலையங்கம்

பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைகளுக்காகவே மேக்கேதாட்டூ அணை கட்டுவதாக எடியூரப்பா கூறுகிறார். பெங்களூரு நகருக்கான குடிநீர்த் தேவை 4.75 டி.எம்.சி தண்ணீர். மேக்கேதாட்டூ அணையோ 67.17 டி.எம்.சி கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்படவுள்ளது. இதிலிருந்தே கர்நாடகாவின் உள்நோக்கம் தெள்ளத்தெளிவாகப் புரியும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்துள்ளதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் தமிழகத்துக்கு வருகிறது. காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கினை அளித்துவருவதாக கர்நாடகா கணக்குக் காட்டுவதே, இந்த உபரி நீரை வைத்துத்தான். காவிரி நதிநீர்ப் பங்கீடு விஷயத்தில் கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை நம்பி நாம் ஏற்கெனவே ஏமாந்தது போதும். ஒருபுறம் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டிவிட்டு, கர்நாடகா எப்படி அணைகளைக் கட்டியது என்பதெல்லாம், காவிரி டெல்டா விவசாயிகளின் ஞாபக அறைகளில் முள்போலக் குத்திக்கொண்டே இருக்கிறது.

கர்நாடகாவின் தந்திரங்களுக்குத் தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் நடத்திவரும் சட்டப்போராட்டத்தில் சிறிதுகூடத் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தென்பெண்ணையில் தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். தமிழகத்தின் நலனுக்கு எதிராகக் கர்நாடக அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் அரசியல்ரீதியாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தடுத்து நிறுத்த வேண்டும்.