சினிமா
தொடர்கள்
Published:Updated:

மின்சாரத்துறைக்கே வெளிச்சம் வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடரும் மின்வெட்டும், அதற்கு அப்பாவி அணில்மீது பழிபோட்ட காமெடியும், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்ட இழப்பு தொடர்பான மத்திய கணக்குத் தணிக்கை அலுவலரின் அறிக்கையும், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வார்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய கணக்குத் தணிக்கை அலுவலரின் 2018-19 நிதியாண்டுக்கான அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மின்வாரியத்தில் கடந்த பல ஆண்டுகளாக எப்படியெல்லாம் முறைகேடுகள் நடைபெற்றுவருகின்றன என்பதைப் பற்றி அதில் தரவுகளுடன் ஏராளமான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மாநிலத்தின் மின்தேவையை நிறைவுசெய்ய புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் வெளிச்சந்தையில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மின்சாரத்தை அ.தி.மு.க அரசு வாங்கியது என்பதை இந்த அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

1 யூனிட் மின்சாரம் 5.42 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்த காலகட்டத்தில், ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 1 யூனிட் மின்சாரத்தை 12.74 ரூபாய் வீதம் தமிழக அரசு வாங்கியது. மின்சாரம் கொள்முதல் செய்ய 8 தனியார் நிறுவனங்களிடம் நீண்ட காலம் ஒப்பந்தம் போட்டதில் 712 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியதால் மின் உற்பத்தி இழப்பு, நிலக்கரியை ரயிலில் அனுப்பியதில் போக்குவரத்து இழப்பு, சரக்குப் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்ட சுமக்கும் திறன் அளவுக்கு நிலக்கரியை ஏற்றத் தவறியதால் பயனற்ற சரக்குக் கட்டண இழப்பு என மின்துறை அலட்சியமாக இருந்திருக்கிறது.

தலையங்கம்
தலையங்கம்

கடந்த அ.தி.மு.க அரசு 2018-19 நிதியாண்டில் மட்டும் 13,176 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நஷ்டமடைந்தது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் என்றால், லாபம் அடைந்தது யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஊழல், முறைகேடு, மோசமான நிர்வாகம் போன்ற காரணங்களால் தமிழக மின்வாரியக் கடன் சுமை 1.59 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

இதற்குப் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்கள், “அ.தி.மு.க ஆட்சியில் மின்வாரியத்தில் ஊழல் இல்லை, இழப்புதான்’’ என்று சமாளிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ‘‘கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்வாரியத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது. அது பற்றி விவாதிக்கலாமா?’’ என்றும் எதிர் சவால் விடுகிறார்கள். அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருந்து அவர்கள் 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இப்போது எழும் இந்தக் குற்றச்சாட்டுகளும் இதேபோல மறக்கவும் மறைக்கவும்படுமோ என்ற சந்தேகமும் இயல்பாக வருகிறது.

ஆட்சியாளர்கள் மாறினாலும், அதிகாரிகள் மாறுவதில்லை. அரசுக்கு நேர்ந்த இழப்புக்கு அவர்களும் பொறுப்பாக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் பழிபோட்டு இருட்டில் மறைந்துகொள்ளக்கூடாது. மின்சாரத்துறையில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதும் இனியும் இத்தகைய தவறுகள் தொடராமல் பார்த்துக்கொள்வதுமே இப்போதைய தேவை.