
தலையங்கம்
`எந்த டெபாசிட்டும் இல்லாமல் ஆன்லைனில் ரம்மி விளையாடுங்கள். கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்’ என்று விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்களும் நடிகர்களும் அழைப்பு விடுக்கிறார்கள். ஆரம்பத்தில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விளையாட்டுபோலத் தோன்றும் ஆன்லைன் சூதாட்டம், நாளடைவில் புதைகுழியாக மாறி உயிர்களைக் காவு வாங்கும் கொடூரத்தைத் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு நடுத்தரக் குடும்பத்தினரையும் அடித்தட்டு ஏழைகளையும் லாட்டரி எப்படிச் சிதைத்ததோ, அதைவிடக் கொடூரமாக ஆன்லைன் சூதாட்டம் பல குடும்பங்களைச் சிதைத்துவருகிறது.
சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இதனால் ஒரு கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து, குடும்பத்தினரைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றி வந்த சரவணகுமார் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து செய்வதறியாது திகைக்கின்றனர். மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாகிவருகின்றனர். சொத்து, சுகம், நிம்மதி என்று அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த சுமார் 60 பேர் கடந்த எட்டு ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.
இதன் விபரீதத்தை உணர்ந்துதான் கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்காக 21.11.2020 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 2021 பிப்ரவரியில் சட்டமன்றத்தில் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. எனினும், சில சட்ட சிக்கல்களைச் சுட்டிக்காட்டி சென்னை நீதிமன்றம் இந்தச் சட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. ‘உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் இப்படி ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது. உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர எந்தத் தடையும் இல்லை’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவந்தது. அப்போதே ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல், ‘தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போகிறோம்’ என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இந்த வழக்கு வேகம் பெறாதநிலையில், தற்கொலைகள் தொடர்கின்றன.
இப்போது, ‘‘உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால்தான் புதிய சட்டத்தை இயற்றவில்லை’’ என்கிறார் சட்ட அமைச்சர். ‘‘ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க உறுதியான சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’’ என்கிறார் தொழில்துறை அமைச்சர். ஏன் இந்தக் குழப்பம்? அவசரச் சட்டம் கொண்டுவர வாய்ப்பு இருந்தும், அரசு ஏன் மேல்முறையீட்டைத் தேர்வு செய்தது? வேண்டுமென்றே தாமதம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்கிறதா? இப்படி மக்கள் மனதில் ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
இந்தத் தேவையற்ற தாமதம் காரணமாக ஏராளமான இழப்புகள் நேர்ந்துவிட்டன. இன்னும் எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்வார்கள், எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் என்பது தெரியாது. உச்ச நீதிமன்றத்தைக் கைகாட்டாமல், அவசரச் சட்டம் இயற்றுவதற்கான சட்டவழிகளை உடனடியாகத் தேட வேண்டும். தாமதம் செய்வதால் அப்பாவிகள்தான் விட்டில்பூச்சிகளாகச் சிக்கித் தவிக்கிறார்கள்.