சினிமா
தொடர்கள்
Published:Updated:

உரிமைக்கு அணை போடலாமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மரங்கள் அமைதியை நாடினாலும் காற்று விடுவதில்லை என்பதைப்போல, தமிழகம் சுமுகமான சூழ்நிலையை விரும்பினாலும் சுயநலம் கொண்ட கர்நாடக அரசியல்வாதிகள் நம்மை விடுவதாக இல்லை. ஜூன் 17-ம் தேதி கூடவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேக்கேதாட்டூ அணைக்கான திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்போகிறார்களாம். தமிழகம் இதைக் கடுமையாக எதிர்க்கிறது.

``காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதும், தீர்ப்பின்படி காவிரி நீர் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதும்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி. மேக்கேதாட்டூ அணை கட்டுவது பற்றி விவாதிக்க, ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. மேலும், மேக்கேதாட்டூ குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அதனால் இதுகுறித்து கூட்டத்தில் விவாதிப்பது சட்டப்படியும் தவறு’’ என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதுடன், உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டியிருக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரான எஸ்.கே.ஹல்தர், ``மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கருத்து கேட்டுவிட்டோம். காவிரிநீர்ப் பங்கீடு தொடர்பான அனைத்து விவகாரங்களும் இந்த ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதுதான் என்று அவர் கூறிவிட்டார். அவரது கருத்தை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்திருக்கிறோம். ஜூன் 17-ம் தேதி நடக்கவிருக்கும் ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டூஅணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம்’’ என்று மீண்டும் கூறியிருக்கிறார்.

``மத்திய அரசு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட முடியாது. எந்தத் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது’’ என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சொல்கிறார்.

இந்நிலையில், `காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணையைக் கட்டுவதற்குக் கர்நாடக அரசு எடுத்துவரும் தொடர் முயற்சிகளை இந்த முறை தமிழ்நாடு அரசால் தடுத்து நிறுத்த முடியுமா’ என்ற கேள்வி, தமிழக விவசாயிகளைத் தூக்கம் இழக்க வைத்திருக்கிறது. மேக்கேதாட்டில் ரூ. 9,000 கோடி செலவிட்டு கர்நாடக அரசு கட்டுவதற்குத் திட்டமிடும் அணை, 66 டி.எம்.சி கொள்ளளவு கொண்டது. அணையைக் கட்டப்போவதாகக் கர்நாடகம் சொல்லும் இடம், தமிழக எல்லைக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தை ஒட்டியிருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீரை எல்லாம்கூட கர்நாடக அரசு இந்த அணையில் சிறைபிடித்துவிடும்.

வறட்சிக்காலங்களில் நமக்கு சட்டப்படியும் நியாயமாகவும் வரவேண்டிய தண்ணீரைக் கேட்டுப் போராடியதும், காவிரி ஆணையமோ, நீதிமன்றமோ உத்தரவு பிறப்பித்தும்கூட `எங்களுக்கே போதுமான தண்ணீர் இல்லை’ என்று சொல்லிக் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்த கடந்தகால நிகழ்வுகளும் தமிழக விவசாயிகளின் மனக்கண்ணில் நிழலாடி அச்சத்தைக் கிளப்புகின்றன.

மேக்கேதாட்டூ என்பது மற்றுமொரு அணை அல்ல; அது தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சதித்திட்டம். இதைத் தடுக்கும் முயற்சி, காவிரியில் நமக்கிருக்கும் உரிமைகளைக் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கை. அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையோடு இருந்து இதற்கான உரிமைப் போராட்டத்தை வென்றெடுக்க வேண்டும்.