
முழுக்க முழுக்க வீடியோ கேம்ஸிலும் பப்ஜியிலும் ஆழ்ந்திருக்கும் குழந்தைகள் `படிப்பு மோடு’க்கு வரவே சில நாள்கள் பிடிக்கும்.
இதோ... இதுவரை நாம் சந்தித்திராத சிக்கலான காலகட்டத்தில் சின்னஞ்சிறு பிஞ்சுகளைத் தேர்வெழுத அனுப்பப் போகிறோம். நாமே வெளியே செல்ல அஞ்சும் வேளையில் பள்ளித் தேர்வுகளை எழுத சிறுவர் - சிறுமியர் செல்வது இன்னும் அதிக அழுத்தம் தரக்கூடியதே. குழந்தைகளை எப்படித் தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவது... முழு உடல் உள்ளத் தெளிவுடன் நம் குழந்தைகள் இருக்கிறார்களா... இப்படிப் பல கேள்விகள் நமக்குள்!
வீட்டை விட்டு வெளியேறியபின் எக்காரணம்கொண்டும் முகக்கவசத்தைக் கழற்றக் கூடாது என்று தெளிவுபடுத்துங்கள். கைப்பிடிகளை இடக்கையால் திறக்க அறிவுறுத்துங்கள். பிசிக்கல் டிஸ்டன்சிங் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றும் சொல்லுங்கள். தேர்வுக்குத் தேவையான பேனா, பென்சில் போன்றவற்றை சரிபார்த்துக் கொடுத்தனுப்புங்கள்; பிறரிடம் குடிநீர் உட்பட எதுவும் வாங்கக் கூடாது என்று புரியவையுங்கள்.
தேர்வு நேரம் என்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சத்தான உணவைத் தொடர்ச்சியாகத் தாருங்கள். கூடியமட்டும் வெளி உணவைத் தவிருங்கள். கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி சுத்தமாகக் கழுவப் பழக்குங்கள். வெளியே சென்றுவிட்டு வந்ததும் கை கால் சுத்தம் செய்வது, உடைகளைக் களைந்து துவைப்பது, முகக்கவசத்தை கவனத்துடன் கைகள் படாமல் அணிவது என்று பொறுமையாகக் கற்றுக்கொடுங்கள்.
பள்ளிக் கழிவறைகளை முறையாகச் சுத்திகரிக்கிறார்களா, சானிட்டைசர், சோப் போன்றவை இருக்கிறதா என்று முன்பே பள்ளிகளிடம் கேட்டு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். கூடுமானவரை பெற்றோர், பள்ளிகளின் முன் கும்பலாகக் கூடுவதைத் தவிருங்கள்.
முழுக்க முழுக்க வீடியோ கேம்ஸிலும் பப்ஜியிலும் ஆழ்ந்திருக்கும் குழந்தைகள் `படிப்பு மோடு’க்கு வரவே சில நாள்கள் பிடிக்கும். படிப்பு நேரத்தில் அவர்களுடன் நாமும் உட்கார்ந்தேனும் இருக்க வேண்டும். குடும்பத்தில் யாராவது ஒருவர் பாடங்களை விளக்கிச் சொல்ல முயற்சி செய்யலாம். அப்பாக்கள் வீடுகளில் இப்போது இருப்பது பெரும் பலம்; கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம். பாடங்களைப் படிக்க அட்டவணை எழுதி கண்ணில்படும் இடத்தில் வைத்துவிடுங்கள். தினமும் படித்தால் சிறு பரிசு உண்டு என்று தெளிவுபடுத்துங்கள். அது சாக்லேட்டாகவும் இருக்கலாம்; அன்றைய தினம் வீடு சுத்தம் செய்வதிலிருந்து விலக்காகவும் இருக்கலாம்.
நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் படிக்க முடிவு செய்தால், அவர்களுடன் அமர்ந்து படிப்பதைக் கவனியுங்கள். முடிந்தால் பள்ளி நிர்வாகங்களிடம் பேசி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடத்திலுள்ள ஐயங்களைப் போக்க வழிசெய்யுங்கள். அவ்வப்போது வீட்டிலேயே சிறு தேர்வுகளை வைத்து, பதில் எழுதச் செய்யுங்கள்.
குழந்தைகளை வழிநடத்தும் பணி நமக்குத் தலையாயது என்பதால், நம்மையும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வோம்; நம் குடும்பத்தினரின் உடலையும் உள்ளத்தையும் பேணுவோம்.

