
உழைப்பாளர் தினத்தை அடுத்து, மே 10 அன்று உலக அன்னையர் தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம்.
மே 1... வழக்கம் போல உழைப்பாளர் தினம் வரவிருக்கிறது. ஆண்டு முழுவதும் வீட்டிலும் அலுவலகத்திலும் உழைக்கும் பெண்கள் இந்த நாளையும் சமையற்கட்டிலும், அலுவலக ஆன்லைன் மீட்டிங்குகளிலும் கழிக்கப்போகிறார்கள்.
ஊதியம் தரப்படாத வீட்டுப் பணிகளைக் கணக்கில்கொண்டால், ஓர் ஆண்டுக்கு இந்தியப் பெண்கள் 29.53 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பிலான பணியை எந்த ஊதியமும் பெறாமல் அவரவர் வீடுகளில் செய்துகொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் ஆறு மணி நேரம் எந்த ஊதியமும் இன்றி தன் உழைப்பை குடும்ப அமைப்புக்கு இலவசமாகத் தந்துகொண்டிருக்கிறாள்.
நோய்த் தொற்று பரவும் இந்த அசாதாரண சூழலில் பெண்கள் முழுக்குடும்பத்துக்கும் தாயாக மாறி குடும்பத்தின் உடல்நலன் பேணுவது, நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவது என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நாடடங்கு காலத்தில் வீதிகளில் குடும்பத்துக்கான பொருள்களை வாங்கிச்செல்பவர்களும் அதிக அளவில் பெண்களே.
உழைப்பாளர் தினத்தை அடுத்து, மே 10 அன்று உலக அன்னையர் தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12 அன்று உலக செவிலியர் தினம் இடம்பிடிக்கிறது.
பக்கத்து ஃப்ளாட்டில் குடியிருக்கும் தோழி, மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றுபவர். குறிப்பாக கொரோனா வார்டில் இப்போது பணி என்பதால் சுற்று முறையில் பணிக்குச் சென்றுவருகிறார்.சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள இயலாத காரணத்தால், மருத்துவமனை தரும் இடத்தில் தங்கியிருக்கிறார். நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. நோய்த் தொற்று தன் குழந்தையை பாதிக்கக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு ஒருபுறம் அந்தத் தாய்க்கு இருந்தாலும், செவிலியராகத் தன் சமூகக் கடமையையும் முழு மனதுடன் நிறைவேற்றி வருகிறார்.
இப்படித்தான் இன்று மருத்துவம் மற்றும் அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடும் அத்தனை பெண்களும் இயங்குகிறார்கள். குடும்பம் ஒருபக்கம், சமூகம் மறுபக்கம் எனத் தங்கள் நேரம், உணர்ச்சி என்று எல்லாவற்றையும் பகிர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி உழைக்கும் அத்தனை பெண்களையும் வாழ்த்தி, வணங்கி இனியேனும் அவர்களது பணிகளை முழு மனதுடன் குடும்பம் பகிர்ந்துகொள்ளும் என்று நம்புவோம்.

