
தலையங்கம்
வந்தாரை வாழவைக்கும் திருப்பூர், இன்று தன்னை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை எப்படி வாழவைப்பது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறது. கடும் நூல் விலை ஏற்றத்தால் இந்த நகரம் பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இந்தப் படு முடிச்சை அவிழ்ப்பது எப்படி, யார் அவிழ்ப்பார்கள், எப்போது அவிழ்க்கப்படும் என்பதற்கான விடை தெரியாததால் ஜவுளித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, உற்பத்தியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் ஒன்றாகச் சேர்ந்து வீதிக்கு வந்து இப்போது அபயக்குரல் எழுப்பிவருகிறார்கள்.
கொரோனாவால் நலிவடைந்த ஜவுளித்தொழில் சமீபத்தில்தான் மீண்டும் தலைதூக்கியது. அதே நேரத்தில் நூல் விலையும் தறிகெட்டு ஏறிவிட, இந்த விலை ஏற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொழிற்சாலைகள் திணறுகின்றன. நாம் ஏற்றுமதி செய்யும் அதே ஆடைகளை வங்க தேசம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யத் தயாராக இருக்கின்றன. தடையற்ற, வரியற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருக்கும் அவர்களுடன் போட்டியிட வேண்டியிருப்பதால் நம்மூர் உற்பத்தியாளர்களால் விலையை ஏற்றமுடியாத சூழல்.
பல்லாயிரம் ஏழைத் தொழிலாளர்களின் எதிர்காலமே இப்போது நூலிழையில்தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதால் இந்தச் சிக்கலை அவிழ்க்க அவர்கள் சொல்லும் வழிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
`கடந்த ஆண்டு நவம்பரில் நூல் விலை கிலோவுக்கு ஐம்பது ரூபாய் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, பஞ்சுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. நியாயமாக இதன்பிறகு நூல் விலை குறைய வேண்டும். ஆனால், இப்போது நூல் விலையை கிலோவுக்கு நாற்பது ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள் நூல் உற்பத்தியாளர்கள்.
நூல் விலை ஏற்றத்தினால் பருத்தி விவசாயிகள் பலனடைந்தால்கூட அரசு இதில் சற்று யோசிக்கலாம். ஆனால், நூல் விலை ஏற்றத்துக்கும் பஞ்சு விலைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத விகிதத்தில் இடைவெளி இருக்கிறது. இடையில் இருப்பவர்கள்தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்பது தெரிகிறது.

`நம்மூர்த் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் நூல் பெரும்பாலும் வடமாநில நூற்பாலைகளில் இருந்துதான் வரவேண்டும். ஆனால், தாங்கள் தயாரிக்கும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கிறது என்பதால் அந்த நூற்பாலைகள் ஏற்றுமதி செய்வதில்தான் ஆர்வம் காட்டுகின்றன. செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பஞ்சையும் நூலையும் பதுக்கி வைக்கின்றன.
இந்தப் பதுக்கலை அரசு முறியடிக்க வேண்டும். விலை சீரடையும்வரை நூல் ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். யூகபேர வர்த்தகத்துக்கான சரக்குப் பட்டியலிலிருந்து பருத்தியை நீக்க வேண்டும்.’ இவைதான் ஜவுளித் தொழில் நிறுவனங்களின் வேண்டுதல்.
பாதிக்கப்பட்டவர்களின் இந்தக் குரலுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும். இல்லாவிட்டால், பல தொழிற்சாலைகள் மூடப்படவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால் ஜவுளித் தொழிலைச் சார்ந்திருக்கும் சாயமேற்றுதல், எம்பிராய்டரி தொடங்கி இந்த உற்பத்திச் சங்கிலியில் கடைசியாக இருக்கும் சரக்கு வாகனங்கள் வரை பல உபதொழில்களும் நலிவடையும். லட்சக்கணக்கான எளிய தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
தமிழகத்திலிருந்து வருடத்துக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் அளவுக்கு நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் தொழில் என்பதால் மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு, திருப்பூரைத் திரும்பவும் நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும்.